பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அ-2-16 பயனில சொல்லாமை 20


 மேலும் ஒரு செய்தியைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாமல், பயனில்லாத சொற்களையும் பொருள்களையும் மிகுதியாகக் கலந்து சொல்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.

அத்துடன் சொல்லுகின்றவற்றுள் பல செய்திகளைக் குற்றமுடையனவாகவும் சொல்கின்றோம்.

சொல்வதில் உள்ள குற்றங்களை நான்கு வகையாக நூல்கள் பகுத்துச் சொல்கின்றன.

அவை: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் எனப்படுபவை.

அவற்றுள்,

பொய் எனப்படுவது, இல்லாததை அல்லது நடவாததை அல்லது உண்மையில்லாததைப் பேசுதல்.

- இது காமமும் பொருளும் பற்றி உண்டாவது என்பர்.

- மேலும், இது துறவிகளுக்கல்லது இல்லறத்தாரால் முழுவதும் கடிய (தவிர்க்க) இயலாதது.

- இது பற்றித் 'துறவறவியலி'ல், 'வாய்மை' அதிகாரத்தில் வைத்துப் பேசப் பெறும்.

- பிறமூன்றும் 'இல்லறவியலு'க்கு உரியனவாகப் பேசப்பெறுவன. குறளை எனப்படுவது புறங்கூறுதல். இது, 'புறங்கூறாமை’ அதிகாரத்துள் கடியப்பட்டது. -

கடுஞ்சொல் எனப்படுவது, கடுமையாக - கேட்பவர்க்கு விருப்பமில்லாத அல்லது நன்மை தராத வகையில் பேசப்பெறுவது.

- இது, 'இனியவை கூறல்' அதிகாரத்துள் கடியப்பட்டது.

பயனில்சொல் என்பது, சொல்லாலும், பொருளாலும் தனக்கோ பிறர்க்கோ பயனில்லாதவற்றைச் சொல்வது.

- இது, 'பயனில சொல்லாமை' என்னும் இவ் வதிகாரத்துள் கடியப்பெறும்.

இனி, பயனில சொல்லுதல் என்பது, வீண்பேச்சு, தீயவற்றைப் பேசுதல், இழிவானவற்றைப் பேசுதல், தேவையில்லாதவற்றைப் பேசுதல், தவறாகப் பேசுதல், தருக்கிப் பேசுதல், தாக்கிப் பேசுதல்-முதலியனவுமாம்.

இவை மனத்தையும், அறிவையும், உடலுணர்வையும் கெடுத்துத் தவறான செயல்களுக்கு நம்மைக் கொண்டு செலுத்தவும், நம் காலத்தையும், வாழ்க்கைப் பயனையும் வீணாக்கவும் செய்வதால் கடியத்தக்கவை என்க.

இது தொடர்பாக வேறு பலநூல்களிலும், ஆங்காங்கே சான்றோர்கள் கூறிச் சென்றதையும் நாம் இவ்விடத்துக் கருதிப் பார்ப்பது நல்லது.