பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அ-2-16 பயனில சொல்லாமை 20


க௬ ௮. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் - 198

பொருள்கோள் முறை:

அரும்பயன் ஆயும் அறிவினார்
பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார்.

பொழிப்புரை : எதிலும், பிறர் எளிதில் அறிவதற்கரிய பயன்களை ஆராய்ந்து உணரும் திறன் உள்ள அறிஞர், பிறர்க்குப் பெரும்பயன் இல்லாத சொற்களையோ பொருளையோ சொல்லமாட்டார்.

சில விளக்கக் குறிப்புகள் :

1) அரும்பயன் ஆயும் அறிவினார் : எதிலும், பிறர் எளிதில் அறிவதற்கரிய பயன்களை ஆராய்ந்து உணரும் திறன் உள்ள அறிஞர்.

அரும்பயன் : எதிலும் பிறர் எளிதில் அறிவதற்கரிய பயன்களை,

ஆயும் அறிவினார் : ஆராய்ந்து உணரும் திறன்உள்ள அறிஞர். மேலோட்டமாக அறிய இயலாததை, ஆராய்ந்து உணரும் திறன் உள்ள அறிஞர். என்னை? .

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (355)

- ஆகலின் என்க.

2) பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் : பிறர்க்குப் பெரும்பயன் இல்லாத சொற்களையோ பொருளையோ சொல்ல மாட்டார்.

'பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார்' என்றலின்.

'பெரும்பயன் உள்ள சொற்களையே சான்றோர் சொல்லுவர்' என்று குறித்தார்.

‘பயனின்று பண்பின் தலைப்பிரியாச் சொல்’ - 97

‘பயன்தெரிவார்’ - 104

'வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்' - 646

- என்று உணர்த்தினார், ஆசிரியர்.

‘பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே’ - இனி.நா: 6:2 .

‘பயமொழி பண்பு பல கூறி’ - கைந்நிலை:43:3