பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

விந்தன் கதைகள்

காலைக் கழுவிக் கொண்டு உள்ளே சென்றேன். அங்கே இருந்த ஒரு கிழவி, "வா அப்பாவா!" என்று என்னை வரவேற்றாள்.

அந்தக் கிழவியைத் தவிர அவளுடைய வீட்டிலும் வேறு யாருமில்லை. நான் அதிசயத்துடன் "உங்கள் வீட்டில்கூட ஒருவரும் இல்லையா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

"இல்லை, அவர்களுடன் தான் இவர்களும் திருநாளுக்குப் போயிருக்கிறார்கள். இந்தப் பாட்டியை மட்டும் எனக்குக் காவலாக விட்டுவிட்டுப் போனார்கள்!" என்று சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.

'அவளுக்குக் காவல்!’

இதைக் கேட்டதும் எனக்குச்சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது - மனமிருந்தால் மார்க்கந்தானா இல்லை?

இவ்வாறு எண்ணி நான் வியந்து கொண்டிருந்த போது, "இலை போட்டாச்சு; சாப்பிட வாருங்கள்" என்று என்னைப் பரிவுடன் அழைத்தாள் அந்தப் பாவை. சிறிது நேரத்துக்கெல்லாம் என்னுடன் கிழவியையும் உட்கார வைத்து அவள்சாதம் பரிமாறினாள். பசி தீர்ந்த பிறகு, நான் படுத்துக் கொள்வதற்காகத் திண்ணை வந்துவிட்டேன்.

அவள் பாயைக் கொண்டு வந்து திண்ணையில் விரித்த போது, "உன்னுடைய பெயர்..." என்று ஏதோ ஒரு விதமான உணர்ச்சி வசப்பட்டு இழுத்தேன் நான்.

"பெயரில் என்ன இருக்கிறது? பேசாமல் படுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொல்லிவிட்டு, அவள் உள்ளே சென்றாள்.

* * *

மூன்றாவது சந்திப்புக்கு முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள் காத்துக்கிடந்த பிறகு, அந்த முல்லைக் கொடியாளின் கிராமத்திற்குப் போவதற்காக ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். கூகுக் கென்று கூவி, ரயில் தான் கிளம்பப் போவதை அறிவித்தபோது, "முல்லை மொக்! முல்லை மொக்!" என்று ஒரு பூக்காரன் கூவிக்கொண்டே வந்தான்.

"இந்த முல்லையில் ஒரு படி மொட்டை வாங்கிக் கொண்டுபோய், அவள் தலையில் கொட்டி அபிஷேகம் செய்தால் என்ன?" என்று நினைத்தேன். உடனே அவனைக் கூப்பிட்டு ஒரு படி மொட்டையும் வாங்கி வைத்துக் கொண்டேன்.