பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

எழுதினாலும், அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலட்சணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.

அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் சிறுகதைகளை எழுதுவதற்கு ஏழை எளியவர்களிடையேயிருந்தும், உழைப்பாளி மக்களிடையே யிருந்தும் ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்; அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் பொருந்தியிருக்க வேண்டும்.

மேற்கூறிய இலட்சணங்கள் பொருந்திய கதை ஆசிரியர்களில் ஒருவர் ஸ்ரீ வி. கோவிந்தன்; உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுகதுக்கங்களை இதயம் ஒன்றி அநுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர்.

அந்த உணர்ச்சிகளை உயிருள்ள தமிழ்நடையில் சித்திரித்து இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியிருக்கிறார்.

ஏழை எளியவர்களின் வாழ்க்கையிலுள்ள சுகசந்தோஷங்களைப் பற்றியும் அவர் எழுதுகிறார்; அவர்களுடைய துன்பவேதனைகளைப் பற்றியும் எழுதுகிறார்.

ஆனால், படிப்பவர்களின் உள்ளத்தில் துன்பமும். வேதனையும்தான் அதிகமாக நிலைபெற்று உறுத்திக் கொண்டிருக்கும்.

அவருடைய கதா பாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் துக்கமில்லாமல் தவிக்க நேரும்.

அவ்விதம் வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கக் கூடிய இயல்பு வாய்ந்த கதைகள்தான் உண்மையான இலக்கியம் என்று தற்காலத்து இலட்சிய புருஷர்களும் இலக்கிய மேதாவிகளும் சொல்கிறார்கள்.

இது உண்மையானால் “விந்த”னுடைய சிறுகதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

“விந்தன்” கையாளும் தமிழ்நடை மிகவும் எளிமையான நடை; ஆனால் பெரிதும் சக்தி வாய்ந்த நடை.

பொருள் விளங்காத பழைய சங்கத் தமிழ்ச் சொற்களையோ பொருள் இல்லாத புதிய மறுமலர்ச்சிச் சொற்களையோ உபயோகித்து