பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தமிழ்த் தாத்தா

அப்போது குடும்பத்தில் சிறிது கடன் இருந்தது. அதை அடைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசிரியப் பெருமானின் தந்தையார் எண்ணினர். சில ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கம் . செய்து பொருளை ஈட்டி அந்தக் கடனை அடைக்க வேண்டுமென்று அவர் நிச்சயித்தார். அதன்படி ஆசிரியர் செங்கணம் முதலிய இடங்களுக்குச் சென்று திருவிளையாடல் புராணப் பிரசங்கம் செய்து வந்தார். அப்போது பல தமிழன்பர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எனினும் மீண்டும் பிள்ளையிடம் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது. அப்போது அம்பர்ப்புராண அரங்கேற்றம் சம்பந்தமாக அம்பர் என்ற ஊருக்குப் பிள்ளை சென்றிருந்தார். அங்கே போய் இவர் தம் குருநாதரைச் சந்தித்தார். அங்கேயே இருந்து சில நூல்களைப் பாடம் கேட்டார்.

காரை என்ற இடத்தில் நடத்திவந்த திருவிளையாடல் புராணப் பிரசங்கத்தை இவர் இடையில் நிறுத்தி வைத்துவிட்டு, அம்பருக்கு வந்திருந்தார். எனவே அங்குச் சென்று அதை நிறைவேற்றினார். அந்தப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசிரியப் பிரானைத் தொடர்ந்து அங்கே இருந்து பிரசங்கம் செய்து வரவேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் ஆசிரியருக்குத் தம் குருநாதரை விட்டுப் பிரிந்து வாழ்வதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார்.

அங்கே வேதநாயகம் பிள்ளை ஒரு நாள் வந்திருந்தார். அவர் மாயூரத்தில் முன்சீபாக இருந்தவர். அவரும் சுப்பிரமணிய தேசிகரும் உரையாடிப் பழகிய தன்மை இவரைப் பெரிதும் நெகிழச் செய்தது.

பிள்ளையவர்கள் மறைவு

1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளை