பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தமிழ்த் தாத்தா

‘தியாகராச விலாசம்’ என்ற பெயரைச் சூட்டினார். அது இன்றைக்கும் சிறப்பாக விளங்குகிறது.


பழைய திருவிளையாடல்

1906-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணம் என்கிற நூலை அரும்பத உரையோடும், வேறு பல ஆராய்ச்சிக் குறிப்புகளோடும் ஆசிரியர் வெளியிட்டார். அதற்குப் பாண்டித்துரைத் தேவர் ஓரளவு பொருளுதவி செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ப் பத்திரிகையில் ஆசிரியர் தொடர்ந்து கட்டுரை எழுதி வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லாமல் இருந்ததனால் வேறு பணி எதையும் தம்மால் செய்ய முடியாமல் இருப்பதாக ஆசிரியர் தெரிவித்தார். “தங்கள் கட்டுரை இருந்தால்தான் பத்திரிகைக்கே மதிப்பு உண்டாகும். தங்கள் விருப்பம் எப்படியோ அந்த வகையில் செய்யுங்கள்” என்று பாண்டித்துரைத் தேவர் மீண்டும் வற்புறுத்தினார்.


பிறநூல்களின் வெளியீடு

அதனால் தாம் ஆராய்ந்து கொண்டிருந்த பண்டைத் தமிழ் நூல் எதையேனும் செந்தமிழ்ப் பத்திரிகையில் தொடர்ந்து பதிப்பித்து வரலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதன்படி, திருவாரூர் உலா ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியாகச் செந்தமிழில் வெளிவரச் செய்தார். 1905-ஆம் ஆண்டு அந்த நூல் நிறைவேறியது.

பிள்ளையவர்கள் பாடியிருந்த தனியூர்ப் புராணத்தை வெளியிட்டார். பின்னர் மண்ணிப் படிக்கரைப் புராணம் வெளியாயிற்று. அதுவும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றியதுதான். சீவகசிந்தாமணியின் இரண்டாம் பதிப்பு 1907-ஆம் வருடம் நடைபெற்று வந்தது. முதல் பதிப்பைவிடப் பல புதிய செய்திகளை அதில் சேர்த்தார். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் அது நிறைவேறியது.


வ. உ. சிதம்பரம் பிள்ளையின் கடிதம்.

1908-ஆம் ஆண்டு ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தின் மேலே சிறை அதிகாரிகள் தணிக்கை செய்திருந்த