பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழ்த் தாத்தா

ஒரு நாள் இவருடைய குமாரர் தம் அலுவலகம் சென்று விட்டார். பிற்பகல் நேரம், இவர் மெல்ல எழுந்து ஓர் அறையில் சென்று அமர்ந்தார். என்னிடம், "பிள்ளையவர்கள் சரித்திரத்தை எடுத்து வா" என்று கட்டளையிட்டார். நான் சற்றுத் தயக்கத்தோடே எடுத்துச் சென்றேன்.

உடனே இவர் பிள்ளையவர்களின் இறுதி நிலையைச் சொல்லத் தொடங்கினார். அந்தக் காட்சியை அவர் தம் மனக்கண்ணால் கண்டிருக்க வேண்டும். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியைச் சொன்னார். பிள்ளையவர்களின் பிரிவை அறிந்து புலவர்களும் பிறரும் வருந்தியதைச் சொல்லோவியமாக எடுத்துரைத்தார். அந்தப் பகுதியை இப்போது யார் படித்தாலும் கண்ணில் நீர் வரும். உண்மை உணர்ச்சியோடு எழுதியிருப்பதனால் தான் அவ்வாறு அமைந்திருக்கிறது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தில் அவருடைய வரலாறு மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அக்காலத்தில் இருந்த புலவர்களின் நிலை, தமிழ் ஆர்வம், பெரிய மனிதர்களின் இயல்பு முதலிய பல செய்திகளைக் காணலாம். எல்லா வகையான சுவைகளும் இருக்கும்.


தியாகராச செட்டியார் வரலாறு

ஐயருக்கு வேலை வாங்கித் தந்தவர் வித்துவான் தியாகராச செட்டியார், அவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். அவர் ஓய்வு பெறும்போது, "நீங்கள் தக்கவர் ஒருவரை உங்கள் இடத்தில் நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டார். 'இவரை நியமிக்கலாம்' என்று அவர் ஐயரைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால் ஐயருடைய திறமையை யாவரும் அறியவேண்டும் என்று எண்ணினார். கல்லூரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் ஐயரை அமரச் செய்து, அந்த ஆசிரியர்களைத் தமிழ் நூல்களின் சம்பந்தமாகத் தமக்கு விருப்பமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார். ஐயர் தக்கபடி விடை கூறி எல்லோரையும் மகிழ்வித்தார்.

அவருக்குத் தமிழாசிரியர் பணியை வாங்கிக் கொடுத்த தியாகராச செட்டியார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். செட்டியார் தமக்குச் செய்த நன்றியை மறவாமல் அவருடைய வரலாற்றை இவர் எழுதியிருக்கிறார். அதைப் படிக்கும்போது நமக்குத் தியாகராச செட்டியார் அதிகத் துணிவுள்ளவர் என்று தோன்றும். அந்தப் பகுதிகளையெல்லாம். ஐயர் செட்டியாரிடம்