பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநடை

73

குற்றம் காணாதவாறு நயமாக எழுதியுள்ளார். தம் இல்லத்திற்குத் 'தியாகராச விலாசம்' என்ற பெயர் வைத்தார்.

ஐயரின் முன்னோர்களில் இசைப் புலவராகிய கனம் கிருஷ்ணையரிடம் ஐயருடைய தந்தையார் பயின்றவர். தம்முடைய குமாரரையும் இசைப் பெரும் புலவராக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழ் நாட்டின் நல்லூழ் இவரைத் தமிழிலக்கியத்துக்கு இழுத்து வந்துவிட்டது. இல்லாவிட்டால் இன்று நாம் எளிதிலே பெற்றுப் படித்து இன்புறும் சங்க நூல்களும் பிற பழங்காப்பியங்களும் நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்.

இப்படி நான் சொல்லுவதற்குத் தக்க காரணம் உண்டு. அந்தக் காலத்தில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலர் இருந்தார்கள். ஏட்டுச் சுவடிகளும் நிரம்ப இருந்தன. ஐயர் ஏடு தேடிய காலத்தில் சில சுவடிகள் கிடைக்காமல் போய்விட்டன. திருவாவடுதுறை ஆதீனத்தில் இளமையில் தாம் கண்ட வளையாபதி பிற்காலத்தில் தாம் பதிப்புத்துறையில் ஈடுபட்டபோது கிடையாமல் போயிற்று என்று ஆசிரியரே வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்.

அக்காலத்தில் பெரிய சங்கீத வித்துவானாக விளங்கியவர் மகா வைத்தியநாதையர். அவருடைய தமையனாராகிய இராமசாமி பாரதியார் பெரிய புராணக் கீர்த்தனையை இயற்றியிருக்கிறார். மகா வைத்தியநாதையர் அடிக்கடி திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சங்கீதக் கச்சேரி செய்வது வழக்கம். ஐயர் அவர் இசையை நன்றாக அநுபவித்துக் கேட்டவர். இசையில் ஞானம் இருந்தமையால் மகா வைத்தியநாதையருடைய இசை நுட்பத்தை நன்றாக அறிய முடிந்தது. அவரோடு பழகி அவருடைய அரும் பண்புகளை உணர்ந்தார். அதன் விளைவாக அவருடைய வரலாற்றை ஐயர் எழுதினார்.

பிள்ளையவர்களிடம் மாணாக்கர் ஆதல்

மாயூரத்தில் இருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தம் புதல்வரை ஒப்புவித்துத் தமிழ் பயிலச் செய்ய வேண்டுமென்று ஐயரின் தந்தையார் விரும்பினார். அவ்வப்போது சந்தித்த சில புலவர்களிடம் சில பாடல்களையும் சில சிறிய நூல்களையும் ஐயர் பாடம் கேட்டிருந்தார். ஆனால் அவருடைய தமிழ்ப் பெரும் பசிக்கு அது போதவில்லை. அப்போதுதான் மாயூரத்தில் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருக்கிறாரென்றும், அவர் எல்லாத் தமிழ் நூல்களையும் கற்றவரென்றும், பாடம் சொல்வதில் வல்லவரென்றும் தெரியவந்தது. அவரிடம் சென்று பாடம்

5