பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தமிழ்த் தாத்தா

பெரிய செய்திக் களஞ்சியமாக விளங்குகிறது. பல வகையான புலவர்களை அதில் பார்க்கிறோம். நல்லவர்களும் பொல்லாதவர்களுமாகிய செல்வர்கள் வருகிறார்கள். சிறந்த உபகாரிகளைச் சந்திக்கிறோம். ஒருவகையில் ஒரு சிறிய உலகத்தையே சந்திப்பது போன்ற தோற்றத்தை அந்த நூல் உண்டாக்குகிறது. 122 அத்தியாயங்களைக் கொண்டது அது. ஹிந்துவில் அதைப்பற்றி மதிப்புரை எழுதிய ஒரு பேரறிஞர், 'அது ஒர் அற்புதமான காவியம்' என்று எழுதியிருக்கிறார். நூல் முழுவதும் எழுதுவதற்குள் இறைவன் இவரை அழைத்துக் கொண்டுவிட்டானே என்ற துயரம் அதைப் படிப்பவர்களுக்கு உண்டாகாமல் போகாது.

இந்தக் காலத்தவர் சிலர் கொள்கைப்படி சற்று அதிகமான வடசொற்களே இவர் ஆண்டிருக்கிறார். ஆனால் அவை இவருடைய தமிழோடு இணைந்து கலந்து இன்புறுத்துகின்றன.

தமிழுலகம் ஒர் அழகிய வாழ்க்கை வரலாற்றைப் பெறச் செய்த ஐயரவர்கள் புகழ் என்றும் மங்காமல் இருக்கும். சங்க நூல்களைக் கண்டுபிடித்துத் தமிழ்நாட்டுக்கு அளித்த பேருதவிக்கு அடுத்தபடி இவருடைய உரைநடை நூல்களாக உள்ளவை; உரை ஒவியங்களாக, செய்திக் களஞ்சியங்களாக விளங்குகின்றன.