பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தகடூர் யாத்திரை


“இவன் உயிரை உண்டிலையானால், பகைவர் பலரது உயிரையும் பருகி நீ வயிறு நிறைவையே! இவன் போரிற் பகைவரைக் களத்தின்கண் கொன்று நினக்கு ஊட்டுவானே!”

கன்றை மேவிய ஆனிரைகள் தாம் மேய்ந்த மேய்ச்சற் காட்டிடத்தே, பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பனவாகும். சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினையுடைய வழிப்போவார் தாம் வேண்டியவிடத்தே தங்குவதற்கான வசதிகள் செய்யப் பெற்றிருந்தன. களத்தின்கண் நிறைந்து கிடக்கும் நெற்போலிகள் காவலின்றியே. கிடந்தன. இவ்வாறாக, எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துறந்தவனும், நிலங்கலங்காத செவ்விய ஆட்சியினைச்செய்து வந்தவனும், உலகத்தார் புகழ்ந்து விளங்கிய போரைச் செய்யும் ஒள்ளிய வாளினை உடையவனும், தப்பாத மொழியினை உடையவனும் ஆக விளங்கியவன் எழினி ஆவான்!

‘அவன் சேரமானோடு பொருது போர்க்களத்தின் கண்ணே வீழ்ந்தான்!’

இங்ஙனம் பாடுகின்றார் அரிசில் கிழார். இவர் பெருஞ் சேரலின் அமைச்சராக விளங்கிய பெருந்தகையாளர். எனினும், எழினியின் சிறப்பினை அதனாற் குறைவாக மதிப்பிட்டு விடவில்லை. அதனை உள்ளவாறே போற்றி உவக்கின்றார். இங்ஙனம், பகைவரும் போற்றிப் புகழப் பெருந்தகுதியுடன் விளங்கியவன். அதிகமான் ஆவான்.

கன்றமர் ஆயம் கானத்து அல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
களமலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாள்
பொய்ய எழினி பொருதுகளஞ் சேர
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றந் தலைத்தலை இணையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமோடு
நோயுழந்து வைகிய உலகினும் மிகநளிை
நீயிழந் தனையே அறனில் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
வீழ்குடி உழவன் வித்துண் டாஅங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய் ஆயின்
நேரார் பல்லுயர் பருகி
ஆர்குவை மன்னோ, அவன் அமரடு களத்தே.