பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

காதலியான முதல் கருப்பத்தை உடைய இளம் பிடி யானையானது அகன்ற இடத்தையுடைய காட்டில் வாழ்கின்றயாளிக்கு மிகவும் அஞ்சி நடுங்கும் மலைச் சாரல் அதனிடத்தே, தேனில் பிழிந்தெடுத்த கள்ளை உடைய குறவரின் முற்றத்தில் மூங்கிலின் அழகிய பூக்கள் உதிரும், நீண்ட இதழ்களை உடைய காந்தள் பூவின் தாள்கள் நீண்டு முறியும், தண் என்று வாடைக்காற்று வீசிடும் முன் பனிக் காலத்தில் எம்மை விட்டு அகன்று இருந்த சில நாள்களுள், நம்மைப் பிரிந்திருக்கும் தனிமையாலே தம் ஊரில் தனித்திருக்கும் இரக்கத்துக்கு உரியவர் இவர் என்ன ஆவாரோ என்று எண்ணிப் பார்த்ததும் உண்டோ ? சொல்லுங்கள்! உலகு உள்ள வரையும் பலரும் புகழும் நல்ல புகழினையும் வாய்மை மொழியையும் உடைய கபிலன் என்ற புலவர் பெருமான் ஆய்ந்து வினையாற்ற, கிளிகள், தொலைவான வளம் வாய்ந்த வயல்கள் உள்ள இடத்தினின்றும் விளைந்த நெற்கதிர்களைக் கொய்து வருதலால் அவற்றைக் கொண்டு அரிசியாக்கி அப் பறம்பு மலையில் உள்ள பெரிய தண்டுகளை உடைய ஆம் பல் பூவுடன் சமைத்து உண்டு வாழ்ந்து பல ஆண்டுகள் கழிந்தன கழியவும், தக்க காலத்தைக் கருதியிருந்து, போர் செய்யத் தக்க நேரம் வாய்த்தபோது அதனைத் தப்பவிடாமல் பகைவர் வாட்போரினைக் கலக்கி முயற்சியால் வென்று நிமிர்ந்த கொம்புகளையுடைய ஆண் யானைகளை உடைய மூவேந்தரையும் தோற்றோடும்படிச் செய்த மிக்க விரைவையும் வள்ளன்மையும் உடையவன் பாரி அவனுடைய இனிய பெரிய பசுமையான சுனையில் பூத்த தேன் மணம் வீசும் புதிய மலர் போன்ற இவளின் நெற்றியினைச் சிறிதளவேனும் நினைத்துப் பார்த்ததுண்டோ! சொல்லுங்கள்” என்று களவுக் காலத்துப் பிரிந்து சென்ற தலைவனுக்குத் தோழி வினவினாள்


394. நான் ஒருத்தி துன்புறல் ஏன்?

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,