பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தொகை - வகை - உரை - த. கோவேந்தன்

அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி
வெறி கமழ் நெடு வேள் நல்குவன் எனினே
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
கான் கெழு நாடன் கேட்பின்,
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
- வெறி பாடிய காமக்கண்ணியார் அக 98

“தோழி குளிர்ந்த மலையின் உயர்ந்த வளம் பொருந்திய பக்க மலையில் வெறுப்பில்லாத கொள்கையுடன் நமக்கு மகிழ்ந்து அளித்த இனிய உள்ளம், பின்னர் இன்னா வாயினமையால் வெறுக்கும்படி நிலை பெறுத்திய நமக்குத் தந்த வருத்தமானது, தெய்வம் உறையும் மலையை உடையவனான அத் தலைவன் மார்பை மீண்டும் நாம் பொருந்துவ தாலே தணியும் என்ற உண்மையை நம் தாயானவள் இன்னும் அறியவில்லையே

நீண்ட கோல் தொழில் அமைந்து நெருங்கி விளங்கும் ஒளி பொருந்திய என் கை வளையல் நெகிழ்ந்த நிலையைப் பார்த்துச் செயலற்ற உள்ளத்தை உடையவளாய்க் கட்டு விச்சியை வினவுதலால், பொய் கூறுதலில் கூர்மையான அறிவுடைய அம் மகளிரும் பிரம்பு அரிசியைப் பரப்பி வைத்து, இது முருகனின் செயலால் நிகழ்ந்தது என்று கூறுதலால், அதை உண்மை என நம்பி, ஓவியம் போன்ற தொழிலால் அழகு செய்யப்பட்ட வீட்டில் பாவையைப் போன்ற பலராலும் ஆராய்ந்து கண்டு மகிழத் தகுந்த மாட்சிமையுடைய அழகானது என் மகளுக்கு முன்பு போலவே சிறப்புறுக என்று முருகப்பெருமானை வேண்டுதல் செய்தாள். பின்பு, தம்முள் இசை முதலியவற்றால் இயைகின்ற இசைக் கருவிகள் பலவும் ஒலிக்க வெறியாடற்குரிய களத்தை இழைத்து, அதற்கேற்ற அழகுகளும் செய்யப்பட்ட அகன்ற பெரிய பந்தலில் வெண்மையான பனந்தோட்டைக் கடப்ப மலருடன், சூடி, கேட்டற்கு இனிய பாடலை மெலிதாக அமைந்த தாளத்துடன் கூட்டி முருகப் பெருமானின் புகழை எடுத்துக் கூறிப் புகழ்ந்து வேலன் வெறியாடுகின்றான். அகன்ற அக் களமானது அழகு பெற வல்லவன் ஆட்டும் பொறிப் பாவையைப் போல ஆடுதலை விரும்பினால் என்ன ஆகுமோ?