பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி


கோல்நிமிர் கொடியின் வசிபட மின்னி
உரும்உரறு அதிர்குரல் தலைஇ, பானாள்
பெருமலை மீமிசை முற்றின.ஆயின்
வாள்இலங்க அருவி தாஅய் நாளை
இருவெதிர் அம்கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ, வண்பரி உந்தி
நனிபெரும் பரப்பின் நம்ஊர் முன்துறை
பனிபொரு மழைக்கண் சிவப்ப, பானாள்
முனிபடர் அகல மூழ்குவம் கொல்லோ -
மணிமருள் மேனி ஆய்நலம் தொலைய
தணிவு அருந்துயரம் செய்தோன்
அணிகிளர் நெடுவரை ஆடிய நீரே!

-

கபிலர் அக 278

“கீழ்க்கடலில் நீரை முகந்த மிகுதியான முகில்கள், வீர முரசம் முழங்கும் மன்னர் படைக்கலங்கள் ஏந்திய படையில் யானைகளை அணிவகுத்தது போல் தோன்றி, வலமாக எழுந்து ஊன்று கோலில் உயர்ந்து விளங்கும் கொடிகளைப் போல் இருள் விலக, மின்னி, இடித்து, உரறி, மிக்க முழக்கத்தைப் பொருந்தி, நள்ளிரவில் பெரிய மலையின் உச்சியில் சூழ்ந்தன. ஆகையால், நாளை, ஒளி விளங்கும் அருவிப் பெருக்கம் பரவிப் பெரிய மூங்கிலின் அழகிய தண்டு முறியும் படித் தாக்கி, அழகிய குதிரை மரங்களைச் சாய்த்து, மிக்க பெரிய பரப்பையுடைய நம் நீர்த்துறையில் வரும் அவ்வாறு வந்தால், மணியைப் போன்ற மேனியின் நலம் கெடுமாறு நீக்க இயலாத துன்பத்தைச் செய்தவனுடைய அழகு விளங்கும் நீண்ட மலையிலே தோய்ந்து வரும் நீரில் பனியைப் போன்ற கண்கள் சிவக்க நள்ளிரவில் துன்பம் நீங்க மூழ்குவோமா?” என்று தோழி தலைவிக்குக் கூறினாள்.

435. விரைவில் வருக திருமண நாள்

பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிமடை அம்பின், வல்வில் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப