பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அஞ்சுவோன் றனைக்கண் 'டப்பா!
ஆண்மையோ டிரு நீ' யென்றும்,
வஞ்சகன் றனைக்கண் 'டந்தோ !
வருந்துவா யினி நீ' யென்றும்,
கஞ்சனை 'உன்னை நீயே
கடையனாய்ச் செய்தா' யென்றும்,
விஞ்சிய கவிஞ னன்றி
வேறெவன் சொல்ல வல்லோன்!

மாயிரு ஞால மக்கள்
மகத்தான வாழ்வு காணத்
தாயினும் பரிவு கூர்ந்து
தக்கவை யெடுத்துக் கூறித்
தீயவை யின்ன தென்னத்
தெரிவிக்கும் கவிஞன் தானே
ஆயினு மதனைப் பற்றி
ஆணவ மகத்து றானே!

பூத்திடும் முல்லை போன்று
புனைவுறைச் சொல்லைக் கோத்து
யாத்திடும் கவிதை யாலிவ்
வகிலத்தைக் கமழ வைத்துக்
காத்திடச் செய்ய வல்ல
கவிஞனைக் காணார்!
கல்முன் கூத்திடு கின்றார், கூடிக்
குவலயத் தியல்போ ராதார்!

சுறவெனு மாறு சுற்றிச்
சுகந்தரற் குற்ற சொந்த
மறவனை மறுத்து, மாறாய்
மகவினைப் பெற்றுக் கொஞ்சக்
குறவனைக் கூடற் கேங்கும்
குணமிலாக் குமரி யொப்ப,
அறிவினை யொதுக்கிக் காசில்
ஆனந்த மெதிர்பார்ப் பாரே!