பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோவைக்குளம்



பயிரெனச் செடிபுற் பூடு,
பனை, தென்னை, வாழை யென்னச்
செயிரென லின்றி யன்றில்,
சிரல், கிளி, குயில், மா டாடாம்
உயிரென வொன்றி, மக்கள்
உவக்குமிவ் வுலக முய்தல்,
பெயரின முகில் சூழ் வானம்
பெய்வதின் பெறும்பே றன்ரறோ?

'அல்லையே பார்த்துப் பார்த்தஃ
தலுத்துவான் விட்டு வந்திங்
கொல்லவே, வுடுக்க ணங்கள்
உலாவிய தெனவே' மீன்கள்!
அல்லியே குவளை , யாம்பல்,
அரவிந்த மலர்கள் பூத்தோ
ரெல்லையே யில்லா இன்பம்
ஈவதிவ் வேரி யன்றோ?

வானாகி வழங்க , வாங்கி
வையகம் காக்கும் நீரில்,
ஊனாகி உடலை யோம்பும்
உயிர்களுக் குணவா கும்பொன்
மீனாகி மிளிரும்! மீனை
மிடுக்காகப் பிடித்து நுங்கிக்
கோனாகி நிற்கும் கொக்கும்!
குடியாகி யலையும் வாத்தும்!

வெளுப்பவர் சிலபேர் சட்டை ,
வேட்டிகள்; விரும்பி நீரில்
குளிப்பவர் சிலபேர்; கோலக்
குவளைக்கண் குமரி மாரைக்
களிப்பவர் சில பேர் கண்டு!
கரைமீது வருவோர் காணா
தொளிப்பவர் சிலபேர், வெட்க
முள்ளவ ருடலை நீர்க்குள் !