பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விடிவு


'சோலையின் சோர்வு நீங்கச்
சுரும்பிசை பொழிக' வென்றோ,
மாலையில் குந்தி யோய்ந்த
மயிலாடி மகிழ்க வென்றோ, -
வேலையை விரும்பிக் கொண்ட
விவசாயி விழிக்க வென்றோ,-
காலையைக் கண்டான், ஞாலம்
கவினுறக் கதிரோன் பூத்தே!

உற்றநல் லுடைமை யோரா
துறவோரா துளங்குன் றாதே,
கற்ற நற் கவிதைக் காகக்
காலத்தைக் கழிக்கு மென்னைச்
சுற்றமாய்ச் சூழக் கொண்டான்
சுகமாக உறையும் சூழல்
மற்றுமோர் நந்நா ளுற்று
மகிழ்விக்க மலர்ந்த தன்றே!

படுக்கைவிட் டெழுந்து பாங்காய்ப்
பாரெழில் பருகுங் கால்நான்,
குடிக்கத்தீம் பாலும், வாயைக்
கொப்புளித் திடவெந் நீரோ
டடுக்குங்கா லன்னை யாய்க்கொண்
டலம்புங்கா லுடன்பி றப்பாய்,
மடுக்குங்கால் மகளு மாயம்
மாண்பினள் மதிமா றிற்றே!

அகத்தினி லன்ப ரும்பும்
அணங்கினை யகத்தில் வைத்தோன்
முகத்தினைக் காணா தென்கண்
முற்றத்தை யுற்ற தோர்ந்து,
சுகத்தினில் சொக்கிச் சோராச்
சுடர்க்கொடி, சுதந்தி ரத்தைச்
சகத்தினி லுள்ளோர்க் கெல்லாம்
சமன் செய்வாள் சாற்றும் முன்னே,