பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

'அருந்திடக் கனிக ளீயும்
அருமந்த நாவ லாய்நான்
இருந்திட விலையே,' என்றே
ஏக்கமென் னிதயத் துற்று
வருந்திட லானேன்; வந்தோர்
வசமாகித் தங்க நேர்ந்தால்
விருந்திட வீடு தோறும்
விரைந்தெதிர் கொள்வா ரூரில்!

வீடுகள், வீதி, கோவில்
வெளியெலாம் பார்த்து விட்டு,
மாடுகள், எருமை, யாடு, -
மயில், குயில் மகிழ்ந்து தங்கிச்
சூடுகொள் வெய்யோன் செய்யும்
சுகக்கேடு தடுத்தாட் கொள்ளும்
கோடுகள் கனி, காய், பிஞ்சைக்
கொண்டவூர்ச் சோலை புக்கேன்!

பழியென்றும், பாவ மென்றும்
பகுத்தாய்ந்து பாரா தோராய்,
‘மொழியொன்று, முறையொன்' றென்ன
முதிர்வின்றி வாழும் மக்கள்
வழியொன்றி வந்திவ் வூரில்,
வயணமாய் வளர்ந்த சோலை-
விழியொன்றின், 'வாழ்வின் வெற்றி
விழ'வெனும் விருந்தா கும்மே!

'காலையே கவின்மி குந்த
காலங்கா' ணென்னும் காக்கை!
‘வேலையே பூந்தேன் மாந்தி
வெறிகொள' லெனும்பொன் வண்டே!
பாலையே பண்ணாய்ப் பற்றிப்
பாடும்பூங் குயில்;பாட் டார்ந்து,
'சோலையே தரும், சு வர்க்கச்
சுக' மெனச் சுகம்சொல் லிற்றே!