பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அறிவு, ஆளுமை, துய்ப்புறல்!- இதனையே சத்து, சித்து ஆனந்தம் என்றும் பண்டைய ஆன்ருேர் வழங்குவர். நடைமுறையில் மக்கள் மனங்களில் பதிந்திருந்து செயல்பட்டிலகிய இவ்வுண்மைகள் காலப்போக்கில் மெல்லத் தேயவிடப்பட்டன, சுயநலம் அங்கங்கே தலைதுாக்கலாயிற்று. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது மக்கள் கொள்கையாயிற்று.

இந்தக் காலகட்டத்தில் மக்கள் முப்பிரிவினராகி விட்டனர் என்று அறிஞர் கூர்ந்தறிந்துரைத்தனர் . 'சத்வ , ரஜஸ், தமஸ்' என்று மக்கள் ஒழுகு முறைகளைக் கொண்டு பெயர்களும் சூட்டப்பட்டன.

'சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டது சாத்விகம்; பொருளை அடிப்படையாகக் கொண்டது ரஜஸ், அறியாமையை அடிப்படையாகக் கொன்டது தமஸ்.

மக்கள் வாழ்வு வழிதவறி விட்டதையறிந்து சாத்விகம் வருந்திற்று. பாலில் நீர் கலந்தது போல, மெய்யில் பொய் கலந்து பொதுநலத்தில் பொத்தல் விழுந்து விட்டதைக் கண்டு சரிப்படுத்தச் சாத்விகம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டது. மனிதனுக்கு மனிதன் பாதுகாப்பு என்பதனை மறக்கக் கூடாது என்றது; வலுத்தவன் இளைத்தவன் மேல் ஆளுமை செய்தல் கூடாது என்றது; அறிவு, பொருள், உழைப்பு எல்லாருக்கும் பொது என்பதை மறக்க வேண்டாம் என்றது; ஒளியிலிருந்து இருளுக்குச் செல்ல வேண்டாம்; அறிவை ஆசைக்குப் பலியிட வேண்டாம்’ என்றெல்லாம் பன்னிப் பன்னிக் கூறிக் குமைந்தது. ஆயினும் பொத்தல் அடைபடவே இல்லை; ருசி கண்ட பூனை உரியுரியாய்த் தாவிச் சட்டி பானைகளை உருட்டி உடைப்பது போலப் பழக்கம் பலப்பட்டு நாடு பாழாகத் தொடங்கிற்று.

எனினும் சாத்விகத்தின் வாயில், 'சத்தியம் சத்தியம்’ என்று பின்னும் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது. ஆயினும் அதில் ஆளுமை இல்லை; வீரியமில்லை; ஆயினும் என்ன?