பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

சூரியனில்லாத நாட்டில் இருள் மூடிக் கொண்டிருப்பது போலச் சத்தியமில்லாத நாட்டில் அறியாமை மூடிக்கொண்டிருக்கும் என்று விதந்து கூறவேண்டியதில்லையே!

தமிழ்மகா பாரதத்தில் மகா மகாப் பொய்கள் கலப்படம் செய்ததோடல்லாமல் இராமயாணத்திலும் வேண்டியதற்கு மேலும் மகாப்படு பொய்களைக் கலப்படம் செய்துள்ளனர். ‘பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற முறையில் இங்கு ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கூறிவிடுகிறேன்.

கௌதம முனிவனின் மனைவி அகலிகை. அகலிகை பெண்ணுக்குரிய எல்லா அழகுகளையும் பெற்று மிகமிகப் பேரழகியாகத் திகழ்ந்தாள். இந்த அழகு இரண்டு கண்களை உடைய தேவேந்திரனைப் பைத்தியமாக்கிச் சுண்டியிழுத்தது. அணியிழை தன்னோர்க்குத் தானே மருந்து' என்பது தேவேந்திரன் படிக்காமலிருந்திருப்பானா?

ஒரு சிறிய தந்திரம்; கௌதமன் ஏமாற்றப்பட்டான் நேரம் கை கூடிற்று, நோயும் தீர்த்துக் கொண்டான். ஆயினும் என்ன? திருட்டுத்தனமாகப் பாலை குடித்து விட்டு வந்தது பூனை. வாசலைக் கூட்டிக் கொண்டிருந்த வீட்டுக்காரி அதைப் பார்த்து வாருகோலால் மொத்தினாள் என்பது போல, கௌதமன் பார்வையில், அவன் அகப்பட்டுக் கொண்டான், 'அடே பாவீ! நீ எதை நாடி இந்தக் குடிசையில் புகுந்தாயோ அதுவே உன் உடல் முழுவதும் ஆகுக! என்றான். மானக்கேடு; வெளியே தலை காட்ட முடியாத சரியான தண்டனை தான் தேவேந்திரனுக்கு.

ஆனால் அகலிகை பாவம் அப்பாவிப் பெண் தான்; ஆனால் முனிவன் கோபம் சில்வான மானதல்லவே! 'நீ கல்லாகிக் கிட' என்றான். அவளும் கல்லாக மாறி விட்டாள். இது நாடறிந்த கதை. கம்பன் அகலிகைப் படலம்; வாரியார் வாய் வழங்கிய ரசனைமிக்குப் பரவசம் பண்ணிய பிரசங்கம்; இதை யார் அறியாதவர் நம் அருமைத் தமிழ் நாட்டில்?