பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கல்வி



வரவின்றிச் செலவொன் றில்லை;
வனப்பான வைய கத்தில்
சரிவின்றி மேடொன் றில்லை;
சங்கிலித் தொடர்பிஃ தென்ன
இரவொன்றிப் பகலு மொன்றி
இயங்கும்நா ளெனவே நாங்கள்
பிரிவின்றி யிருந்து வாழ்ந்து
பெறும்பயன் பிறர்க்கே யன்றோ?

கற்றது கேட்ட தன்றிக்
கருத்தினிற் படியக் காணப்
பெற்றது பேணி வைத்துப்
பெறுவது பிணைத்தா ராய்ந்து
மற்றது மறையா வாறு
மக்களுக் குரைத்து மாறா
யுற்றது பெருமை யொன்றே!
உள்ளது வறுமை யொன்றே!

கோழைவாழ் வாக முண்மைக்
கோட்பாடு கொள்ளார் வாழ்வு :
ஏழைவாழ் வாகும் திண்மை
இதயத்தி லில்லார் வாழ்வு:
தாழைவாழ் வாகும் தண்மைத்
தயவிலாத் தனிகர் வாழ்வு:
வாழைவாழ் வாகும் வண்மை
வரகவி வாழும் வாழ்வே!

சுகத்தினிற் சுவையு றாதும் ,
சுதந்திரம் துலங்கும் துாய
முகத்தினில் முனிவு றாதும்
முறையாக நூல்க ளாராய்ந்
தகத்தினை யாட்கொண் டுள்ள
அறிவினைக் கவிதை யாக்கிச்
சகத்தினிற் சாவை வென்றேன்
சத்தியக் கவிஞ னேகாண்!