கவியகம், வெள்ளியங்காட்டான்/குழந்தையைக் காணோம்

விக்கிமூலம் இலிருந்து
குழந்தையைக் காணோம்

குழந்தையொன்று வேண்டுமெனக் கூறக் கொண்டாள்
குவலயமே மகிழவொரு குழந்தை தந்தாள்!
பழந்தமிழும் கொழுந்தோடிப் படர்வ தென்னப்
பாலகியை நான்பரிவாய் வளர்த்தேன்; காலை
எழுந்துவெளி யேசெல்ல இருந்தேன்; என்னை
எடுத்துக்கொள் ளென்றதுவந் தியலா தென்றேன்
விழுந்துபுரண் டழலானாள்; வெளியே சென்றாள்;
வீட்டுக்கு வரவில்லை; - எங்கோ காணோம்!

பசுவுக்குப் புல்வாங்கப் பைசா வின்றிப்
பரிதவித்துக் கொண்டிருக்கும் போதும் வந்து:
குசுகுசெனச் செவியருகில் குனிந்து, 'தங்கக்
குனுக்கொன்று வாங்கித்தா அப்பா!' என்றாள்.
வசியம்செய் புன்முறுவல் வழங்கு மந்த
வடிவழகென் னுளமுருக்க, 'முடியா' தென்றேன்
விசித்துவிசித் தழலானாள்; வெளியே சென்றாள்;
வீட்டுக்கு வரவில்லை. - எங்கோ? காணோம்!

கொத்தாரும் பூம்பொழிவில் கூடி யாடிக்
குடுகுடென வந்தெனது மடியில் குந்திச்
செத்தாருக் குயிரூட்டும் தமிழ்வாய் தன்னில்
தேனெழுக இளங்குதலை, மொழியா 'லப்பா!
முத்தாரம் வாங்கித்தா என்றாளம்மா!
முடியாதென் னாலென்றே னுடனே பொத்தல்
சித்தாடை யால் கண்ணை யொற்றிக் கொண்டே
சென்றவள்தான் வரவில்லை: - எங்கோ? காணோம்!

மண்ணிடையே வெண்ணிலவில் வட்டம் சுற்றி
மலாக்கரத்தி னிதழ்விரலால் சுட்டிக் காட்டி,
'விண்ணிடையே மிளிர்கின்ற தங்கத் தட்டு
விலையில்லை யெடுத்துத்தா அப்பா!' என்றாள்.
பண்ணிடையே தெறிக்கின்ற இன்பச் சொற்கள்
பரவசம்செய் தெனைவருத்தப் 'பலிக்கா' தென்றேன்.
கண்ணிடையே கருமணிகள் கசங்கும் வண்ணம்
கைகொண்டு பிசைந்தாளைக் காணோம்! காணோம்!