பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அண்ணனும்‌ தம்பி யும்தாம்‌ ஆயிரங்‌ கோடிப்‌ பேரிம்‌
மண்ணினில்‌ மகிழ்ந்து வாழ்ந்து மறைந்திருப்‌ பார்கள்‌! மற்றிங்‌
கெண்ணமும்‌, செயலும்‌, சொல்லும்‌, எழில்‌, நல மெல்லா மொத்துக்‌
கண்ணிரண்‌ டொருமு கத்தில்‌ காண்பபோ லிருந்தார்க்‌ காணேம்‌!

தமயன்‌ தம்பிக்கு தரம்‌ தகுதி கூறல்‌

'நம்புதற்‌ கியலா தேனும்‌, நம்பாதும்‌ விடுதற்‌ கில்லை;
கும்பியைக்‌ குமுற வைக்கும்‌ கொடுஞ்செய்தி' யெனவே சத்யன்‌,
தம்பியை யழைத்துத்‌ தன்பால்‌ தயவாக அமர்த்திக்‌ கொண்டவ்
வம்பினைக்‌ களையும்‌ நற்சொல்‌ வயணமாய்‌ வழங்க லானான்‌;

"பறக்கின்ற பறவை பட்சி பறப்பதை மறந்த போதும்,
மறக்கின்ற தன்றே யென்றும்‌ மறக்குடிக்‌ குரிய மாண்பு!
பிறக்கின்ற போதே பெற்றுப்‌ பேருண்மைக்‌ காகக்‌ காத்தாங்‌.
கிறக்கின்‌ற வரையும்‌ வாழ்வை இயக்கவே யிருப்ப தன்றோ?

பழுதிலா திருந்திப்‌ பாரில்‌ பண்பொடு வாழார்‌; பாவம்‌!
அழுதலா தென்றும்‌ தீரா அழிம்புக ளாடித்‌ 'தெய்வம்‌
எழுதலா லேற்ப' தென்றே ஏமாற்றிக்‌ கொண்டு தம்மைப்‌
பொழுதெலாம்‌ பொருமி நொந்து பொன்றுதல்‌ காண்கின்‌ றோம்‌நாம்‌!

பொன்னரும்‌ வண்ணம்‌ போலும்‌ பொன்றாத புகழைப்‌ பூண்டு,
இன்னறும்‌ மலர்க ளென்ன இதயத்தின்‌ மணமும்‌ மல்கத்‌
துன்னருந்‌ துயரம்‌ தொற்றித்‌ தொடரினும்‌, தூய்மை யாளன்‌
தன்னரு முயிர்தந்‌ தேனும்‌ தகுதியைக்‌ காத்துக்‌ கொள்வான்.

தானமே தவமே யென்னும்‌ தார்மிகத்‌ தருமம்‌ காத்து,
'வானமே' என்றிவ்‌ வையம்‌ வாழ்த்திட வாழே மேனும்‌,
'ஈனமே' என்று மேலோர்‌ இகழாம லிருந்து வாழ்வில்‌
மானமே னும்நாம்‌ காத்து 'மனிதனே' எனல்வேண்‌ டாமோ?