பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

வாலையாம் வனிதை மேல்‌கண்‌ வாலிபன்‌ வைப்ப தொப்ப,
வேலியை விழைந்து பார்த்தார்‌; விதைப்புக்கு வேண்டி வேறு
கோலிய வுழவுக்‌ காட்டைக்‌ குணிந்துற்றுப்‌ பார்த்தார்‌. "பண்ணை
வேலையில்‌ விடலைக்‌ கூரில்‌ வேறெவர்‌ நிகர்வா" ரென்றார்‌.

மருகனின்‌ மனந்தான்‌ மற்றிம்‌ மாமனைக்‌ கண்டு மாறி-
உருகிய நெய்யு ருக்காய்‌ உறைந்துபல்‌ லுடைத்தற்‌ காகக்‌
கருகுகள்‌ மீன்கள்‌ கொத்திக்‌ குலைத்திடும்‌ குளத்து மேட்டின்‌
அருகினி லிருந்த கன்றாங்‌ கணுகினா ரறுப்புக்‌ காட்டை!

வேய்மானுந்‌ தோளாள்‌ காதல்‌ வேணியை யெதிர்பார்த்‌ தோனும்‌,
தாய்மாமன்‌ வருதல்‌ கண்டு தானெதிர்‌ கொண்டு சென்று
வாய்மான "வெயிலில்‌ வந்தீர்‌; வாருங்கள்‌ மாமா" வென்றே
தேய்மான மின்‌றிக்‌ காய்க்கும்‌ தீம்பலா நிழல்சேர்ப்‌ பித்தான்‌.

மாமா முகத்துதி பண்ணல்‌


"பண்ணையைப்‌ பார்த்து மெத்தப்‌ பரவசப்‌ பட்டேன்‌: பார்த்த
கண்ணையும்‌ கவரும்‌; காணார்‌ காதையும்‌ கவரும்‌ நித்யா!
எண்ணையும்‌ எழுத்தை யும்நீ இகழ்ந்தனை யெனினு மிந்த
மண்ணையும்‌ மதிக்கச்‌ செய்யும்‌ மாபெருங்‌ கலைஞன்‌ நீதான்‌!

செல்வச்‌ சிறப்பு செப்புதல்‌


"உடலெனு மொன்றிற்‌ குள்ளே உயிருள்ள வரையில்‌, வாழ்வைக்‌
கடலெ'னச்‌ சொல்வர்‌ கற்றோர்‌; 'கரையெதி ரலைமேற்‌ காணும்‌
படகெ'னப்‌ பகர்வர்‌ 'பையில்‌ பணத்தினைப்‌' பண்ப டாத
விடலைநீ; யிதையு னக்கு விளக்கலென்‌ விருப்ப மப்பா!

கூண்டினிற்‌ குருவி யாய்நீ, குளிர்முகில்‌ குவிந்து லாவும்‌
நீண்டவான்‌ தனில்ப றக்க நினைவுகூ ராதோ னாகி,
ஆண்டவ னருளால்‌ வாய்க்கும்‌ அரியஇச் சம்பந்‌ தத்தை
'வேண்டிய தில்லை' யென்று விவரமற்‌ றொதுக்கா நின்றாய்‌!