பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சத்தியன்‌ சஞ்சலம்‌

"இந்தப்பெண்‌ பேச்சைக்‌ கேட்டே னிதுமுதல்‌ குற்றம்‌! எண்ணா
தந்தப்பெண்‌ பார்க்கச்‌ சென்றே னதுஇரண்‌ டாம்குற்‌ றம்‌;பின்‌,
'பந்திப்புண்‌' டெனமா மாபால்‌ பகர்ந்தது மூன்றாம்‌ குற்றம்‌!
நிந்திப்புண்‌ டெனநான்‌ நெஞ்சில்‌ நினைத்திலே" னென்ற சத்யன்‌,

இருதலைக்‌ கொள்ளி யின்கண்‌ எறும்பென இதயம்‌ நொந்தே,
ஒருதலைத்‌ துணிந்தோ னாகி யுரைத்தன னுணர்வி னோடும்‌:
"தறுதலை யாகி விட்டான்‌ தம்பியின்‌ றெனினும்‌, தாங்கிப்‌
பரிதலை விட்டு நீக்கின்‌ பாவம்வந் தடுக்கு" மென்றே.

நித்தியன்‌ நெருப்புகுத்தல்‌

"கலைத்தெரு விதில்நான்‌ தோன்றிக்‌ கனிவாகக்‌ காப்போ ரின்‌றி,
வலைத்தெரு வதில்வ ளர்ந்து வம்புவா தனைத்தும்‌ கற்றுக்‌
கொலைத்தெரு வதில்பின்‌ கூடிக்‌ கொடுமைகள்‌ பயின்று தேர்ந்து
புலைத்தெரு புகுந்தேன்‌ போலும்‌, பொழுதுபோக்‌ கிடமில்‌ லாதே!

சேம்புறக்‌ குளங்கள்‌ தொட்டுச்‌ செழிப்புற வயல்கள்‌ கட்டிக்‌
காம்புறக்‌ கதிர்கள்‌ விட்டுக்‌ களமுற வடித்துக்‌ கொட்டித்‌
தீம்பற வுழைப்போர்‌ தின்று திளைப்புற, வழங்கித்‌ தீர்க்கா
வீம்புறு மனித னாசை வீடுற விரும்ப லொன்றே.

'உழைப்பவ ருண்ணா துண்ணும்‌ உலுத்தர்க ளுதித்த வூர்கள்‌
தழைப்பதே யில்லை' யென்னும்‌ தருமத்தைத்‌ தவிர்த்துத்‌ தங்கள்‌
பிழைப்புக்குப்‌ பிறர்பி ழைப்பைப்‌ பேயென வுறிஞ்சு வோற்கா
யழைப்பினை விடுதாம்‌ தெய்வம்‌, 'அப்பனே வாஇங்‌' கென்றே.