பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மாணிக்கத்தின்‌ மறுமொழி

"உழக்காடிப்‌ பாடி யென்ன உபயோகம்‌? ஒரு படிக்குள்‌
முழுக்காட நேரு மென்னும்‌ முறையிலே மொழிந்தேன்‌ முன்பே!
கிழக்காடி மேற்கு மாடிக்‌ கிழிபடும்‌ குருத்தாய்‌ நீங்கள்‌
வழக்காட வேண்டா மப்பா! வருந்துவீ ரெனக்கேட்‌ டீரா?

தங்கையின்‌ மகன்தா னென்று தலைதட்டத்‌ தலைப்பட்‌ டீர்நீர்‌!
எங்கிலும்‌ காணேன்‌ தூய இதயத்தி லிவனை யொப்பார்‌!
செங்கையில்‌ தெய்வம்‌ நின்று செயல்படு கின்ற தப்பா!
உங்களை மட்டு மன்றிவ்‌ வுலகையே வெல்வா" னென்றாள்‌.

சத்தியன்‌ குறுக்கிடல்‌

"பழந்துணி பதனம்‌ பண்ணிப்‌ பாராட்டி னாளாம்‌ பாட்டி!
விழுந்திதைக்‌ கெடுத்து விட்டு விரிக்கிறாள்‌ கடையை வீணாய்‌!
கொழுந்தனின்‌ கையில்‌ தெய்வம்‌ குதித்ததாம்‌; இவள்கண்‌ டாளாம்‌!
எழுந்தினிப்‌ போடீ! மாமா! எழுங்கள்சாப்‌ பிடலா?" மென்றான்‌.

மாணிக்கம்‌ கோடி காட்டல்‌

"போடியை மதுரைப்‌ பக்கம்‌ போய்ப்‌ பார்த்து வாரீர்‌! பூளை
வாடியைப்‌ பார்த்து வந்தீர்‌! வாயில்நீ ரூற வேநீர்
கோடியைத்‌ துதித்துக்‌ கோரிக்‌ கும்பிட்டீர்‌! கூட்டில்‌ வானம்‌
பாடியைப்‌ பதைக்கச்‌ செய்வீர்‌; பாவத்தைப்‌ பாரீ" ரென்றாள்.

தந்தையின்‌ தாக்குதல்‌

"மாட்டுக்குத்‌ தொழுவம்‌ தானே மாபெரும்‌ வைகுந்‌ தம்மிவ்‌
வீட்டுக்குத்‌ தலைவி நீ!யுன்‌ விருப்புவே றாயின்‌ பின்னிவ்‌
வாட்டுக்குட்‌ டிக்கு நானா ஆலாத்தி சுற்ற வந்தேன்‌?
பாட்டுக்குத்‌ தாளம்‌ போடப்‌ பழகினாய்‌ மகளே" யென்றார்‌.