பக்கம்:அறிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அப்பா பதில்‌ செப்பல்‌

"கோத்திரம்‌ குலங்க ளொத்துக்‌ குணம்‌,குறி நலங்க ளொத்து,
நாத்திகன்‌ நெஞ்சு மொத்து, நங்கையின்‌ மனமு மொத்து,
மூத்தவர்‌ புத்திக்‌ கொத்த மொழியிது வாயின்‌, முற்றும்‌
ஆத்திக னெனக்கொவ்‌ வாத ததிலெதூம்‌ இலையே" யென்றார்‌.

சத்தியனின்‌ உத்தமமான தடை

"இன்றுண்டு நாளைக்‌ கில்லை', யெனுமிந்த வுலக வாழ்வில்‌,
நன்றுண்டு; தீது முண்டு; நடைமுறை யிதனை நாடின்‌,
'அன்றுண்டு பொருளின்‌ றில்லை; ஐயகோ!' வெனுமா றாத
லொன்றுண்டு தடைதா" னென்றான்‌, யோசனை புரிந்த சத்யன்‌.

செல்வி சிக்கவிழ்த்தல்‌

"நிலமெலா மென்பே ருக்கு நியதியற்‌ றெழுதி வைத்துத்‌
தலமெலாம்‌ தாழ்த்திப்‌ பேசும்‌ தவறொன்று செய்தா ரப்பா;
நலமெலா மிதனால்‌ கெட்டு நாசமா காமல்‌, நானே
குலமெலாந்‌ தழைக்கப்‌ பங்கிக்‌ கொடுப்பேன்வே ணிக்குப்‌ பாதி!

வேண்டிய வேண்டி யோர்க்கு விரும்பவே வாரித்‌ தந்தும்‌,
ஆண்டுக்கி லட்சம்‌ ரூபாய்‌ ஆவது மீதி யாயின்‌,
ஈண்டிதில்‌ வாழ லாம்நன்‌ கிருந்திரு குடும்பங்‌ கள்தாம்‌;
மீண்டெதும்‌ தடையே யில்லை; மேலிட்டு முடிப்பீ" ரென்றாள்‌.

வஞ்சகம்‌ தஞ்சமற்றுத்‌ தவித்தல்‌

தைத்தது தகப்பன்‌ நெஞ்சில்‌ தாற்றுக்கோல்‌ தானா யிச்சொல்‌!
கைத்தது தட்டில்‌ வைத்த கமழும்சிற்‌ றுண்டி! கையில்‌
வைத்தது வைத்த தாகி, 'வயதாகி வந்து வாய்த்த
பைத்திய மெனவே பார்த்துப்‌ 'பசுவானே!' என்றார்‌ மாமா!