பக்கம்:அறப்போர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறப்போர்


யுடைய, பேதைப் பருவப் பெண்கள், கோடு கிழித்த மணவிலே புனைந்த பாவைக்கு வளைந்த கொம்பிலே உள்ள பூவைக் கொய்து தண்ணிய பொருநையாற்றுப் புனலிலே குதிக்கும், வானை முட்டும் புகழையும் வெற்றியையும் உடைய வஞ்சிமாநகரில் உள்ளவனாகிய, புலவர் பாடும் புகழ்ப் பாடல்கள் பல அமைந்த வெற்றி வேந்தனாகிய சேரமான் பகைவருக்கு வெம்மையையுடைய அரண்களை வென்று வலிமையையுடைய எதிரிகளின் புறத்தைப் பெற்றான்; அவ்வாறு புறத்தைப் பெற்ற வலிமையையுடைய வேந்தனுடைய வீரத்தைப் பாடின விறலியும் அழகையடைய உயர்ந்த அளவுக் கழஞ்சுப் பொன்னாற் செய்த கனமான ஆபரணங்களைப் பெற்றாள்; அவ்வாறு ஆபரணத்தைப் பெற்ற விறலிக்குக் குரலோடு புணர்ந்த, தாள அளவையுடைய, பாட்டிலே வல்ல பாணனும் விளக்கமான தீயிலே செய்ததும் வெள்ளி நாரால் தொடுக்கப் பெறுவதுமாகிய பொற்றாமரைப் பூவைப் பெற்றான்.(யான் ஏதும் பெறவில்லை.)

அரி-மென்மை, இழை-நகை. மடம்-பேதைமை, மங்கையர் என்பது பருவத்தைக் குறியாமல் பொதுவாகப் பெண்களைச் சுட்டியது. வரி-கோலம் செய்யும்; கோடு கிழிக்கும், குலவு - வளைவையுடைய. சினை - கொம்பு - பொருநை-வஞ்சி நகரத்தில் ஓடும் ஆறு; பூர்ணா நதி என்பர். பொரு-மோதும். விறல்-வெற்றி. சான்ற-நிரம்பிய, வெப்பு-வெம்மை; கொடுமை. கடந்து-வென்று; துப்பு-வலிமை, உறுவர் - எதிர்வந்து போர் செய்தவர்; பகைவர். புறம்- முதுகை, பெற்றிசின் - பெற்றான், பெற்றாள். வய-வலிமை. மறம்-வீரத்தை , பாடினி-பாடுகிறவள்; விறலி. ஏர் - அழகு. விழுக்கழஞ்சு-உயர்ந்த கழஞ்சுகள்; தலையளவாகிய கழஞ்சுகள். சீர்-கனம்; சிறப்புமாம். இழை-ஆபரணம். குரல்-முதல் சுரம், சீர்-தாள அளவு, சுருதி, லயம் என்னும் இரண்டையும் இசைக்குத் தாயாகவும் தந்தையாகவும் சொல்வார்கள். அந்த இரண்டும் நன்றாக அமைந்ததைப் புலவர் இங்கே

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/72&oldid=1267441" இலிருந்து மீள்விக்கப்பட்டது