பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அகநானூறு - மணிமிடை பவளம்



பேய்போன்ற தலையையுடைய சருச்சரை பொருந்திய அரையினையுடைய தாழையினது;

முள்ளாகிய பற்களையுடைய நெடிய மடல்கள் பல ஒரு சேரக் காப்ப;

நடுவிடத்தைப் பிறப்பிடமாக வுடைய மொட்டுக்கள் தூய்மையாக விரிந்து, புலால் நாற்றத்தினைப் பொருது வென்று அழித்ததனால், பூமணமே கமழும் கடற்பரப்பினிடத்தே, பரக்கின்ற அலைகள் கரையிலே தந்த குளிர்ந்த கதிர்களையுடைய முத்தங்கள், விரும்பிய நடையையுடைய குதிரையின் காலை வடுப்படுத்து முடஞ்செய்யும், நல்ல தேரையுடைய வழுதியின் கொற்கைப் பட்டினத்து, முதன்மையான கடற்றுறையின் கண்ணே;

வண்டினால் வாய் விரிக்கப்பெற்ற வளைந்த கழியிடத்துள்ள நெய்தற்போது, அழகினுக்குத் தோற்றுப் புறங் கொடுத்த, ஒளிபொருந்திய முகத்தின்கண்ணுள்ள மையுண்ட கண்ணின் காதலொடு பொருந்திய, வனப்பு மிகுந்த பார்வையினை,

எதிர் நின்று நீர் கண்டீராயின், இவ்வாறு என்னை இடித்துக் கூறவே மாட்டீர்.

அது காணவில்லையாதலால், எம்மை இடித்துக் கூறுவீராயினர்.

என்று, பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தான் என்க.

சொற்பொருள்: 1. கேளிர் - கேட்பீராக! 4. முண்டகம் - கழிமுள்ளி, 5.பிணர் - சருச்சரை.8. பரப்பின்- கடற்பரப்பின் கண். 9. ஈர்ங் கதிர் - தண்ணிய ஒளிக்கதிர். 10. கவர் நடை - விரும்பும் நடை கால்வடுத் தபுக்கும் - காலைவடுப்படுத்து முடம்படுக்கும். 12. வாங்கு கழி - வளைந்த கழி.14 மதைஇய - வனப்பு மிக்க

உள்ளுறை பொருள்: கழிமுள்ளியின் மொட்டோடு தாமரையின் மொட்டுப் பொருந்தியிருந்ததென்பது காதற்றோழி யோடு தலைமகள் கூடியிருந்த தன்மையாகவும்; தாழையின் தோடுகள் பல சூழ்ந்து அம் முகையைக் காத்திருந்தது, ஆயவெள்ளம் தலைமகளை இடைவிடாமற் சூழ்ந்திருந்த தன்மையாகவும்; உள்ளுறையாகப் பொருள்படக் கூறிப், பாங்கற்குத் தலைமகள் தான் கண்ட தலைமகளது இயல்பினை உரைத்தானாகக் கொள்க.