பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அகநானூறு - மணிமிடை பவளம்


        இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி
        கொல்புனக் குருந்தொடு கல்அறைத் தாஅம் 15

        மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த
        வரிமரல் கறிக்கும் மடப்பினைத்
        திரிமருப்பு இரலைய காடிறந் தோரே.

சிவலின் கால்முள்ளைப் போன்றவான மொட்டு முதிர்ந்த வெட்சிப்பூ, கானவர் சுட்டு அழித்த தினைப்புனத்துக் குருந்தம் பூவோடு, கற்பாறையின்கண் பரந்துகிடக்கும், மிளைநாட்டின் பாலை வழியிலேயுள்ள, ஈரமான மேட்டிடத்திலே, செருக்கி வளர்ந்த வரிகளையுடைய மரலைக் கடிக்கும் மடப்பிணையுடன் கூடிய, திரிந்த கொம்பினையுடைய இரலைமான் வாழும் காட்டிற் சென்ற நம் தலைவர்.

குன்றிமணிபோலும் கண்ணுடையவாய், நன்னிறம் பொருந்திய மயிரையும் புல்லிய காலையும் தாடியையுமுடைய ஆண் வெள்ளெலிகள் சிவந்த பரல்கள் மிக்க வன்னிலத்திலே கிளறிய புழுதியின் கண்ணே, மணநாளாகிய நன்னாளிலே பூக்குமியல்புடைய வேங்கைப்பூ விழுந்து நல்ல வெறியாடும் களம்போல அழகு செய்யக், கார்காலம் தலைக்கூடியதனால் பசிய புதல்களையுடைய முல்லை நிலத்திலே, வில்லினாலே அடிக்கப்பட்ட பஞ்சிபோல வெள்ளியமேகங்கள் தவழா நிற்கும், காட்டிடத்துப் புதுப் புனத்தினையுடைய சிறிய மலையின் பக்கத்திலே;

கரிபரவினாற் போன்ற காயாவினது பூவாடலோடு, எரிபரவினாற்போன்ற இலவமலர், கலந்து, அழகிய வண்டலோடு, எரிபர வினாற்போன்ற இலவமலர், கலந்து, அழகிய வண்டலைச் சுமந்த தீவிய நீரையுடைய காட்டாற்றின் கண்ணே, வானை எட்டிய காற்று நீர்த்துவலையை எழுப்பித்தர உண்ணுவேமாகிய எம்முடன் வருதலை மாட்டுவையோ என்று,

பெருமை பொருந்திய ஒரு வார்த்தையைக் கேட்டார்.தோழி!

கேட்டனரே அல்லாமற் கொண்டு தலைக்கழிந்திலர் என்று, தலைமகள் தோழிக்குக் கூறினாள் என்க.

விளக்கம்: மன் (13) ஒழியிசை. ஒருகால் கொண்டு தலைக் கழிதலும் கூடும் என்று தலைவி நினைத்தலால், அவள் ஆறுதல் பெற்றனள். தாம் பசித்திருக்கவும் தன் பிணை மரலைக் கறித்துப் பசிதீர்வதைக் கண்டு மகிழும் இரலையையுடைய காட்டிற் சென்றவராதலால், நம் தலைவர் தாம் பாலையில் உழந்தன