குடும்பப் பழமொழிகள்/வைத்தியம்

விக்கிமூலம் இலிருந்து

வைத்தியம்

காலம்தான் தலை சிறந்த வைத்தியர். -யூதர்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

- தமிழ் நாடு
வைத்தியரின் மரங்களுக்கு நம் கண்ணீர்தான் தண்ணீர்.
- இந்தியா

வைத்தியருக்கு மூக்கிலே படர்தாமரை. -( , ,)

அரைகுறை வைத்தியனால் உயிருக்கு ஆபத்து, அரைகுறை முல்லாவால் சமயத்திற்கே ஆபத்து. -( , ,)

[முல்லா- முஸ்லிம்களின் குரு]

நீதிபதி, வைத்தியர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பானாக. -துருக்கி

உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது. -சீனா

வைத்தியர் தூரத்திலிருந்து கொண்டே மருந்து அனுப்புதல், குருட்டுக் கண்ணால் பார்ப்பது போலாகும்.

-யூதர்

இலவச வைத்தியம் - பயனற்ற மருந்தாயிருக்கும். -( , ,)

நோயை சொன்னால்தான், குணமாக மருந்து கிடைக்கும்.
- ஃபிரான்ஸ்
வைத்தியர் வந்தாலே, நோய் குணமாகத் தொடங்கிவிடும்.
-( , ,)
வைத்தியர்கள் மட்டும் பொய் சொல்ல அனுமதியுண்டு.
-( , ,)

மெத்தப் படித்த வைத்தியரை விட ஆக்கமுள்ள வைத்தியர் மேல். -ஜெர்மனி

வைத்தியர் இளமையா யிருந்தால், எப்பொழுதும் மூன்று சவக்குழிகள் தயாரா யிருக்கவேண்டும். -ஜெர்மனி

வைத்தியனுக்கு மூன்று விஷயங்கள் தேவை: சிங்கத்தின் இதயம், பெண்ணின் கரம், கழுகின் பார்வை. -( , ,)

நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், வைத்தியருக்கு 'ஃபீஸ்' உண்டு. - போலந்து

பிச்சைக்காரர்களுக்குள் அவ்வளவு துவேஷம் கிடையாது. வைத்தியர்களுக்குள்ளே அதிக வெறுப்பு உண்டு.
-( , ,)

தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்பவனுடைய நோயாளி மூடன். -இங்கிலாந்து

பல வைத்தியர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான்.

-ஸெக்

தண்டனை யடையாமல் கொல்லக்கூடியவர் வைத்தியர் ஒருவரே. -ஹங்கேரி

எல்லோரும் ஆரோக்கியமா யிருந்தால், வைத்தியர் பாடு திண்டாட்டம். -( , ,)

கடுமையான நோய்க்குக் கடவுளே வைத்தியர். -( , ,)

ஒரு தொழிலும் தெரியாதவன் வைத்தியனாகிறான். - இதாலி

வைத்தியர்கள் அதிகமானால், நோய்கள் பெருகும்.

-போர்ச்சுகல்

வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள். - ரஷ்யா

ஒவ்வொரு பிணிக்கும் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாட வேண்டாம்.

-ஸ்பெயின்

மரணம்தான் கடைசி வைத்தியர். -( , ,)

நீ வைத்தியரை வெறுத்தால், பிணியையும் வெறுக்க வேண்டும். - ஆப்பிரிகா

அநுபவமில்லாதவன் வைத்தியரைக் குணப்படுத்திவிடுவான். -( , ,)

நீயோ வைத்தியரை ஏமாற்றிவிட்டாய்; அடுத்த நோய்க்குச் சொந்த வைத்தியம் செய்துகொள். -( , ,)

வைத்தியர்களில் வயதானவர், வக்கீல்களில் வாலிபர்.

- இங்கிலாந்து

குணப்படுத்துவது கடவுள், சம்மானம் பெறுவது வைத்தியர். -( , ,)

தேவை வருமுன்பே வைத்தியருக்கு மரியாதை செய்ய வேண்டும். -( , ,)

வைத்தியரிடத்திலும் வக்கீலிடத்திலும் உண்மையை மறைக்காதே. -இதாலி

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

- தமிழ் நாடு

ஒன்றும் தெரியாத வைத்தியன் கொலைகாரனைத் தவிர வேறில்லை. -சீனா

வாலிப நாவிதன், வாலிப வைத்தியன் இருவரிடமும் எச்சரிக்கையா யிருக்கவேண்டும். - இங்கிலாந்து

வைத்தியர் குணமாக்கினால் சூரியனுக்குத் தெரியும், வைத்தியர் கொன்று விட்டால், பூமிக்குத் தெரியும்.

-( , , )

வைத்தியர்கள் கலந்து ஆலோசிப்பதற்குள், நோயாளி இறந்து விடுகிறான். -( , , )

வைத்தியருக்குக் கொடுப்பதை ரொட்டிக்காரனுக்குக் கொடு. -ஃபிரான்ஸ்

வைத்தியருக்குக் கொடுப்பதை இறைச்சிக்காரனுக்குக் கொடு. -ஃபிரான்ஸ்

நோயைக் காட்டிலும் வைத்தியருக்கு அஞ்ச வேண்டும்.
-( , , )

ஒவ்வொரு வைத்தியரும் தம் மாத்திரைகளே உயர்ந்தவை என்று எண்ணுகிறார். -ஜெர்மனி

புது வைத்தியர் புதிதாகச் சவக்குழி தோண்டுபவர்.
-( , , )

நல்ல வைத்தியர் எவரும் தாம் மருந்து உண்பதில்லை.

-இதாலி

வைத்தியர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரைத் தவிர வேறில்லை. -லத்தீன்

நோய்களுக்கு அஞ்சி ஓடும் பொழுது, நீங்கள் வைத்தியர் கைகளில் சிக்குகிறீர்கள். -( , , )

சூரியன் ஒரு போதும் வராத இடத்திற்கு வைத்தியர் அடிக்கடி வருவார். - ஸெக்