அறிஞர் அண்ணா நினைவஞ்சலி/அண்ணா ஒரு நிலா!

விக்கிமூலம் இலிருந்து



11. அண்ணா ஒரு நிலா!


வசந்த காலத்தின் வரவை நம்பி, முளைகள் ஏற்கனவே தளிர்விட ஆரம்பித்தன.

குருத்துவிட்டுக் கிளம்பிய கனிகள் - சிறு குழந்தைகளின் உதடுகளைப் போல், எந்நேரமும் திறந்த வண்ணமே இருந்தன.

பச்சைக் கிளிகளின் குஞ்சுகள் - கிளைகளில் குந்தியிருப்பதைப் போலத் தளிர்கள் இருந்தன.

உதயசூரியன் மதிய ஒளியனான பிறகு, உழைத்துக் களைத்த மகனுக்கு ஆறுதல்கறி - அன்பு காட்டும் தாய்போல - அந்தி, மாலை நேரத்தில் சூரியனை அழைத்தது.

குறளில் அடங்கும் ஒப்பற்ற பொருளைப்போல், சூரியன் அந்திக்குள் அடங்கினான்.

விளக்க முடியாத துன்பத்தால் இருண்டு போயிருக்கின்ற விதவையின் உள்ளம்போல் - உலகின் மேல் இருள் கவிழ்ந்தது.

வானம் அப்போது நிர்மலமாக இருந்தது.

காலமறிந்து தாக்குவதற்காகப் படை வீரர்கள் பதுங்கிப் பதுங்கி, எதிரியின் எல்லையை எட்டிப் பார்ப்பதுபோல் - விண்மீன்கள், ஒவ்வொன்றாகத் தலையைக் காட்டின.

அவற்றின் கண்கள் சிவந்திருந்தன. நெடுந்தூரத்தில் செல்லுகின்ற தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப்போல, சில நேரத்தில், விண்மீன்கள் தெரிய ஆரம்பித்தன.

ஒரு மனிதனுடைய வாழ் நாட்கள், பறக்கின்ற பறவையைப் போல செல்லுகின்றது என்றால் - அந்தப் பறவைகள் கூடு கட்டுகிற இடம், விண்மீன்கள் மீதுதானா?

என்னுடைய மன உளைச்சலிலிருந்து, நான் விடுதலை பெறுவதற்காக, என் கையில் ஒரு விளக்கு இல்லையே - என்று, இயற்கையெனும் கலைஞனைப் பார்த்துக் கேட்டேன்.

அவன் தன் நெற்றியைச் சுருக்கிக், கால்களை அகல விரித்து, உன்னை நான் இருட்டுக்கு அழைத்துச் செல்லவா? ஒளி தரும் சூரியனைப் பகலிலே தந்தேன்?

நீ தாமரைப் பூத்த தடாகத்தில் குளித்துவிட்டு -

மல்லிகை மணக்கும் பூங்காவில் ஓய்வெடுத்தபின் -

வண்டுகள் மொண்டு வைத்த தேனை வாரி உண்ட பின் -

உன் வழிப் பயணத்தை என்னிடத்தில் முடித்துக்கொள் என்று நான் சொல்லவில்லையா?

மறைபட்ட பொருளை வெளியாக்கி - சிறைபட்டச் சீவனை விடுதலை செய்து -

முட்டாள் தனத்தை அறிவு மயமாக்கி -

குழந்தையை வாலிபனாக்கி

வாலிபத்தை வயதாக்கி -

மேலை கீழாக்கி - கீழை மேலாக்கி

சகதியிலே நீ விழாமல் இருப்பதற்காக, உனக்கென ஓர் ஒளியை உருவாக்கியவன் நான்.

அந்த ஒளி - வானத்தில் நிலவாகவும் - பூமியில் உன் மன அறிவாகவும் இருப்பதை நீ உணரவில்லையா?

நீ, கேட்ட பிறகு உன் கோளுக்கு இணங்கி, அதோ அந்த வான வட்டத்தை, உனக்காகப் பரிசளிக்கிறேன்.

அதன் பெயர் நிலவு.

அந்த நிலா, ஒப்பற்ற ஒளிப் பிழம்பு.

தெளிவுக்கு இலக்கணம் அது.

இந்த ஒளியால் அதனைத் தீண்டியவர்கள். ஒரு போதும் இருளில் இருந்ததில்லை.

காணாமல் போன தனது சீவனைத் தேடிக்கொண்டு அலைபவன்கூட, அந்த நிலவொளியில், காட்டோரத்தில், கண்கலங்கி கொண்டிருக்கும் சீவனைக் கண்டுபிடிக்கிறான்.

உறவு முறைகள் - பழுதுபட்டு அங்கங்கே உதிர்ந்து போகிற நேரத்தில், அந்த ஒளியால் சிதறியதை, மனிதன் பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியும்.

நெடுந்தூரத்திலிருந்து, ஒளி கொடுக்கின்ற சூரியனிடமிருந்து, சூடு வருகிறது.

ஆனால், நெடுந்தூரத்திலிருக்கின்ற நிலாவிடம் இருந்து - சூடு வருவதில்லை.

இந்த வித்தியாசம் ஏனென்று, புரிகிறதா?

உலகத்தில் சிலர், அணுகுகிற நேரத்தில் கொதித்துக் கொண்டுமிருப்பார்கள் - குளிர்ந்து கொண்டும் இருப்பார்கள்!

மனிதன், விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவனுக்குச் சூரியனையும் - உழைத்து, அலுத்த நேரத்தில், அலுப்புக் கேற்றபடி நிலாவையும், நான் படைத்தேன்.

நிலா, கடலைக் கூத்தாடச் செய்கிறது.

நிலவுக்கு, இந்த உலகத்தைத் தூங்க வைக்க முடியும.

தனது வாழ்நாளை இந்த உலகம், நிம்மதியில் கழிக்க வேண்டுமென்பதற்காக, கோடிக் கணக்கான தாரகைகளோடு, வருகின்ற பெரிய உள்ளம் படைத்தது நிலா.

சூரியனுக்குக் கை எடுப்பதுபோல, நிலவுக்குக் கையெடுக்க - இந்த சமுதாயம் ஏன் மறுக்கிறது?

அதிலே, ஓர் இரகசியம் இருக்கிறது!

பகலவனை வணங்குகின்ற நேரத்தில், மனிதன் விழித்துக் கொண்டிருக்கிறான்.

நிலவைப் பற்றி நினைக்கின்ற நேரத்தில், மனிதன் பாதித் தூக்கத்திலே இருக்கிறான்.

மென்மையான தென்றலின் தேர் மேலேறி பயணம் வருகின்ற இராக்கால மவுனம் - நிலவைத் தன்மீது குடையாகப் பிடித்துக் கொண்டு வருகிறது.

உலகத்தின் நடவடிக்கைகளை முழுமையாகக் காணவேண்டு மென்றால், இரவு நேரம் சரியான நேரமாகும்.

பெரிய மனிதர்களின் போலி வேடமும் -

சந்தர்ப்பவாதிகளின் - கொட்டமும் -

சாகசத்தின் முழு உருவமும்

கட்டவிழ்த்த குதிரையாக ஓடுகின்ற நேரம் - இராக் காலமாகும்.

அந்த நேரத்தில், பொதுவாக மனிதப் பண்பு பலவீனமடைகிறது.

மனிதனுடைய சுய உருவம் - தெரிய ஆரம்பிக்கின்ற நேரத்தில், சிரித்த முகத்தோடு பார்ப்பது நிலாவாகும்.

அந்த நிலவை நாம் போற்ற வேண்டும்.

அது தத்துவத்தில இருந்தால், அதனைப் புத்தம் என்று அழைப்போம்.

அது கவிதையிலிருந்தால் - அதனைக் கவித்துவம் என்று, பாராட்டுவோம்.

சித்தாந்தத்தில் அது இருந்தால், அதைச் சித்தர் பட்டியலிலே சேர்ப்போம்.

அது கணிதத்தில் இருந்தால், எண்களின் மாயத்தில் சேர்ப்போம்.

இலக்கியத்தில் இருந்தால், அதனைப் புலமையிலே சேர்ப்போம்.



அது வானத்தில் இருப்பதனால் நிலவு என்கிறோம். அது அரசியலிலும் இப்போது வந்திருக்கிறது.

ஆதலால், அதனை அறிஞர் என்று அழைப்போம். இரக்கமற்ற மனிதக் கண்கள், அந்த நிலவைச் சபிக்கின்ற நேரத்தில், அது தன் குளிர்ச்சியைவிட்டுக் கொதிப்படையவில்லை.

ஊமைக்கும் அதியற்புதமான கற்பனையைக் கொடுக்கக் கூடிய சக்தி, நிலா என்று, கவிஞர்கள் கூறுகிறார்கள்.

உடம்பெல்லாம் தொழு நோய்ப் பற்றிய ஒருவன், அந்த நிலா ஒளியில் செல்கிற நேரத்தில், அவன் பாதி குணமாகி விடுகிறான்.

இல்லையென்றால், அவன் உடல் பூராவும் தங்கமாய், மின்னுவதைப் பார்க்கிறோம்.

மண்ணிலே புதையுண்ட தங்கத்தை வாரிக்கொள்வதைப் போல், விண்ணிலே புதைந்த நிலவைக் கண்களால் வாரிக் கொள்கிறோம் கருத்தால் நிரம்பிக் கொள்கிறோம்.

பேரறிஞர்களை நிலவுக்கு ஒப்பிடுவதின் மூலம், நம்முடைய ஆசையைக் காட்டிக் கொள்கிறோம் என்று நினைக்கக்கூடாது.

உயர்ந்த இடத்தில், ஒருவன் சென்றால், அவன் சூரியனைப் போல் எரிச்சலாக இருப்பான்.

ஆனால், பண்பட்ட அறிஞர்கள் உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும், எரிச்சலாய் இருக்கமாட்டார்கள்.

உயர்ந்த இடத்தில் எரிச்சலை ஊட்டாமல் இருப்பது நிலவு! ஆகவே அண்ணா அவர்கள் ஒரு நிலா.

இப்படி, வாழ்க்கையின் தத்துவத்திற்கு ஒட்டி வருகின்ற ஒரு நிலா, பலருடைய இரகசியத்தை அறிந்ததாகும்.

கோடி மக்களின் அனுபவத்தை உணர்ந்ததாகும்.

அதன் அறிவின் ஆழத்தை, அவனுள் இறங்கி யாரும் கானவில்லை.

அதன் விரிவில், யாரும் குடித்தனம் செய்யவில்லை.

அதனுடைய செறிவில், யாரும் அணுவாகவில்லை.

ஆனால், அதன் ஒளிமட்டும் ஊருக்குப் பரவுகிறது.

அதன் வட்ட வடிவில் அறிவின் சிதறல்கள்.

அதன் மவுனத்தில், ஞானத்தின் தெளிவு.

தன்னிடத்திலே இருக்கின்ற பெரிய சக்தியினால், அந்த நிலா கர்வமடைவதில்லை.

தனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி, அது நெடுநேரம் பேசுவதில்லை.

அது இழுக்கின்ற பிராணவாயுவில் - மக்களின் சக்தி இருக்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை முதல், பழையதாகப் போகின்ற மனிதன் வரை - அதன் பெருமைக்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.

ஏற்றத் தாழ்வென்ற படிக்கட்டுகளிலே ஏறி, அது சரிந்து கீழே விழுந்ததில்லை.

அந்த நிலவைக் கோபப்படுத்திப் பார்த்தாலும், அது கொதிக்கின்ற சூரியனாவதில்லை.

பூமியில் இருக்கின்ற சில அராஜக எரிமலைகள், அதன்மீது தீக்குழம்புகளை வாரி இறைத்தபோது கூட, நிலா சூட்டினால் - வெடிப்பு விடுவதில்லை.

பொறுமையின் எல்லைக் கோட்டில், அந்த நிலா நின்றுகொண்டு, அடக்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி - நடந்து கொண்டிருக்கின்ற கரு முதல் கல்லறை வரையில் துன்பத்தால் அமர்ந்து கொண்டிருக்கின்ற மனித சமுதாயம், நிலவை நம்பியே - தன்னுடைய வாழ்நாளைத் துவங்குகின்றது.

வீசியடித்த புயல், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அந்தப் புயலுக்குப் பெயர் மக்கள் எழுச்சி - அந்த எழுச்சிக்குக் கர்த்தா அறிஞர் அண்ணா என்ற வெண்ணிலா.