பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

நாடகத் தமிழைப் பற்றி நாள்தோறும் பேசுகிறோம். அதைப் பேணி வளர்த்த பெரியாரைப் பற்றி நாடு இன்னும் பேச வில்லை.

1922–ஆம் ஆண்டுவரை நம்மிடையே வாழ்ந்து மறைந்த தமிழ் நாடகத் தலைமையாசிரியர் ஒருவருடைய பெயர் தமிழ் மக்கள் மனத்திலே நின்று நிலவும் அளவுக்கு நன்கு விளம்பரப் படுத்தப்படவில்லை.

நாடக உலகம் மட்டுமன்று தமிழ் இலக்கிய உலகமே தன் இதயத்தில் வைத்துப் போற்ற வேண்டிய பெரும் புலவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். ஆனால், தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கு எங்கள் சுவாமிகளைப் பற்றி எதுவும் தெரியாது. பெயரைத் தெரிந்த ஒரு சிலருக்கும் அவருடைய பெருமை தெரியாது. இது காலம் செய்த ச்தி.

சுவாமிகளின் ஆயிரக்கணக்கான மாணாக்கர் கூட்டத்தில் அடியேனும் ஒருவன்; அவர் வாழ்ந்த காலத்தில் நான் அறியாச் சிறுவன். நன்கு அறிமுகப்படுத்தும் அளவுக்கு உறவாடிப் பழகியவனல்லன்.

பெரியவர்கள் யாரேனும் இப் பணியைச் செய்திருந்தால் பெரு மகிழ்ச்சியடைந்திருப்பேன். என்ன செய்வது? எவரும் முன்வரவில்லை.

எனக்குத் தெரிந்த சில குறிப்புக்களும் என்னுடன் மறைந்து விடக்கூடாதே என்னும் எண்ணத்தால் எழுதத் துணிந்தேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க.

இது, எனக்கு நாடகக் கல்வி பயிற்றி நல்வழி காட்டிய குருநாதருக்கு நான் செலுத்தும் நன்றிக் கடன்.

இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளையும் எனக்கு அறிவித்த பெரியார்களுக்குத் தலை வணங்குகிறேன்.

சுவாமிகளின் புலமைக்குச் சான்று கூறும் ஒரு பாடல் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. அது தமிழ்ப் பேரறிஞர்கள் அவரை நன்கறிந்து கொள்ளத் துணை செய்யுமென்று நம்புகிறேன்.

சுவாமிகளின் நாடகங்களையும் நூற்றுக் கணக்கான தனிப்பாடல்களையும் நல்ல முறையிலே மீண்டும் அச்சியற்ற வேண்டும்: அவை இலக்கிய உலகிலே இடம் பெற வேண்டும் புதுச்சேரி மண்ணிலே சுவாமிகளின் திருவுருவை மறைத்த இடத்திலே ஒரு மண்டபம் எழுப்ப வேண்டும்.

இவை நான் காணும் கனவுகள். காலம் இவற்றை நனவாக்கட்டும்.

‘அவ்வையகம்’
சென்னை-30
மன்மத-ஐப்பசி-22}}
டி. கெ. சண்முகம்