பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

சுவாமிகள் பாடம் கேட்டுத் தமது தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ்ப் பாடம் கேட்ட போது நமது சுவாமிகளுக்கு உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்கள் சக மாணவராயிருந்தார். கவிராயர் அவர்கட்கும் ஆசிரியர் சுவாமிகளுக்குமுள்ள அன்புத் தொடர்பு மிகப் பிரசித்தமானது. அதுபற்றிய சில குறிப்புக்களைப் பின்னர் அறிவோம்.

கணக்கர் கவிஞரானார்

தூத்துக்குடி உப்புப் பண்டகசாலையிலே சுவாமிகள் சிலகாலம் கணக்கராக வேலை செய்தார். தமது பதினாறாவது வயதிலேயே சுவாமிகள் வெண்பா, கலித்துறை, இசைப் பாடல்கள் முதலியனவற்றை எழுதத் தொடங்கினர். கவிதைப் புலமைக்கும் கணக்கு வேலைக்கும் போட்டி யேற்படவே சில ஆண்டுகளுக்குப் பின் சுவாமிகள் தமது இருபத்து நான்காவது வயதில் நாடகத் துறையில் பிரவேசித்தார்.

நடிகர்—நாடகாசிரியர்

முதன் முதலாகச் சுவாமிகளின் புலமையை அறிந்து பயன் படுத்திக் கொண்டது திருவாளர்கள் ராமுடு ஐயர், கல்யாணராமையர் ஆகிய பழம் பெரும் நடிகர்களின் நாடக சபையெனச் சொல்லப்படுகிறது, இச் சபையில் முதலில் நடிகராகவும் பின்னர் ஆசிரியராகவும் சுவாமிகள் சில ஆண்டுகள் பணியாற்றினர். இரணியன், இராவணன், எமதருமன், ‘நளதமயந்தி’ யில் சனீசுவரன் முதலிய வேடங்கள் சுவாமிகளின் நடிப்புத் திறமையை எடுத்துக்காட்டிய சிறந்த பாத்திரங்கள் என்று கருதப்பட்டன.