பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பார்த்திருக்கிறேன். அதுவும் எமன், இரணியன், சிறுத்தொண்டரில் காள பைரவர், கடோத்கஜன் முதலிய வேடங்களைத் தாங்குவோருக்கு அவரேதான் நடித்துக் காட்டுவார். கண்களை உருட்டி விழித்துக் கோபக்கனல் தெறிக்கப் பற்களை ‘நற நற’ வென்று கடிக்கும்போது எங்களுக்கெல்லாம் சுவாமிகளைப் பார்ப்பதற்கே அச்சமாயிருக்கும். சாதாரணத் தோற்றத்திலேயே இவ்வாறு அச்சமேற்படுமானால் வேடத்தையும் போட்டுக்கொண்டு நிற்கும்போது எப்படி யிருந்திருக்கும் ?

முத்துச்சாமி சேர் சங்கரதாசர்

ஒரு புலவரை மற்ருெரு புலவர் பாராட்டுவது அபூர்வமாக இருந்த அந்தக் காலத்தில் சுவாமிகளுக்கும் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்களுக்கும் இருந்த அன்புத் தொடர்பைப் பற்றிப் பல பெரியார்கள் வியந்து கூறக் கேட்டிருக்கிறேன். இரு பெரும் புலவர்கள், அதுவும் ஒரே துறையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒற்றுமையோடு பழகிய பான்மையைக் கண்டு எல்லோரும் அதிசயப் பட்டிருக்கிருர்கள்.

சுவாமிகள் காலஞ்சென்றபின் தத்துவ மீனலோசனி சபையில் கவிராயர் அவர்கள் சில மாதங்கள் ஆசிரியப் பொறுப்பை ஏற்று மதுரைவீரன், மன்மத தகனம் முதலிய நாடகங்களைப் பயிற்றுவித்தார். எங்களெல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு கவிராயர் அவர்கள் சுவாமிகளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.

கவிராயர் அவர்கள் பெரும்பாலும் பாட்டின் கடைசி வரியில் தனது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதேயில்லை. அக்காலத்திலிருந்த புலவர்களிற் பலரும் இவ்வாறு ‘முத்திரை அடி’ பொறித்துத்தான் பாடலை முடிப்பது வழக்கம். சுவாமிகள் ஒருவர் மட்டும் இதில்