பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—துளு

43

களின் சொற்களெல்லாம் வடமொழியே யன்றிக் கன்னடமல்ல.

கர்நாடகம் என்ற சொல் பன்னூறாண்டுகளாகவே வழக்கில் இருந்துவருகிறது. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டினரான வராஹமிஹிரர் அதனை எடுத்தாளுகிறார். தாரநாதரும் கர்நாடம் என்பதைக் குறிக்கிறார். முகம்மதியர்கள் இதனைக் கர்நாட்டிக் என்றனர். ஆங்கிலேயர்கள் “கானரீஸ்” என்று திரித்து வழங்கலாயினர்.


V. துளு

துளு அல்லது துளுவம் திருந்தியதொரு மொழியேயாகும். எனினும், அதற்குத் தனிப்பட்ட வரிவடிவமோ, இலக்கியமோ இல்லாமையால் அதனைத் திருந்திய மொழியினத்தில் சேர்த்தல் ஒல்லுமோ என்று ஐயுறுதல் கூடும். துளு மொழியில் முதன்முதலாக நூல்கள் சில அச்சிட்டவர்கள் பேசில் மிஷனைச்[1] சேர்ந்த குருமார்களே யாவர். ஆனால் அவர்கள் அந் நூல்களைக் கன்னட மொழியின் வரிவடிவிலேயே அச்சிட்டுவிட்டனர். ஆதலால், துளு மொழிக்குரிய எழுத்து கன்னடமே என்று நம்பப்படுவதாயிற்று. இலக்கியமில்லையேனும் துளு மிகவும் திருந்திய திராவிட மொழிகளுளொன்று என்று தான் கூறவேண்டும்.

இம் மொழி சிறு தொகையினரான மக்களால் குறுகிய அளவுள்ள ஒரு பகுதியில்மட்டும் பேசப்பட்டு வருகிறது. கன்னடக் கோட்டத்தில் ஒடும் சந்திரகிரி, கல்யாணபுரி என்ற இரண்டு ஆறுகளும் இம் மொழி வழங்கும் பகுதியின் இரண்டு எல்லைகளாகக் கருதப்படுகின்றன. அவ் வெல்லைகளைக் கடந்து அது வழங்கியதாகக் கூறுதற்கு மில்லை.


  1. Basle Missionaries