பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

காணப்படும் வேற்றுமை மிகுதியால், அவை ஒன்றுட னென்று வேறுபடுகின்றன என்பதைச் சான்றுகளுடன் எடுத்து விளக்கிக் காட்டுதலைவிட்டு, அவையெல்லாம் ஒரே மூல மொழியைச் சார்ந்தவையே என்றும், அம் மூல மொழி திராவிட மொழிதான் என்றும் சான்றுகளுடன் ஈண்டு விளக்கிப்போதலே, கடமையாயிற்று.


திராவிட மொழிகள் வடமொழியின் வேறானவை:

தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொன்றும் பார்ப்பனர்களிடமிருந்து பெறப்பட்டதாகத்தா னிருக்க வேண்டுமென்று வடமொழிப் பண்டிதர்கள் இயல்பாகவே நம்பிவந்தார்கள். அதனை யொட்டியே அவர்கள் திராவிட மொழிகள், வட இந்திய மொழி மரபுகளிலிருந்து எத்துணையோ மாறுபட்டிருப்பினும், வடமொழி யினத்திலிருந்து பெறப்பட்டவைகளே என்று சாதித்துவந்தனர். இதனைப் பண்டைய ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் எளிதில் நம்பிவந்தனர். அவர்கள் ஆராய்ந்த திராவிட மொழிகள் ஒவ்வொன்றிலும் ஓரளவிற்கு வடமொழிச் சொற்கள் தத்பவமாகவும், தத்சமமாகவும் கலந்திருக்கக் கண்டனர். ஆனால், அம் மொழிகளில் வடமொழிக் கலப்பில்லாத சொற்களும், மரபுமொழிகளும் பல இருந்தன வென்பதையும், அவையே அம்மொழிகளின் சிறப்பியல்புகள் என்பதையும், அவற்றிலேதான் அவ்வம் மொழிகளின் தனிப்பட்ட உயிர்நிலை அமைந்துகிடந்தது என்பதையும் அவர்கள் கண்டறிந்துகொள்ளவில்லை. அதன் பயனாக, அவர்கள் அம்மொழிகளிற் காணப்படும் வடமொழியைச் சார்ந்தனவல்லாத பகுதிக ளெல்லாம் யாதோ ஒரு பண்டைய புறநாட்டு மொழியைச் சார்ந்தவை என்று கூறிவந்தனர். அக் கொள்கைப்படி திராவிரர்களுக்கும்,[1] கெளரர்களுக்கு[2]மிடையே


  1. Draviras
  2. Gauras