பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

71

றிரண்டு வடசொற்களும் மாயமாய்ப் போய்விடும். அப்பகுதியிற் காணப்படும் வட சொற்களுள் ஒன்றே ஒன்றிற்குத்தான் குற்றஞ் சொல்லாத வகையில் நேர்த் தமிழ்ச்சொல் அமைக்க முடியாது. அச் சொல் ”விக்கிரகம்”[1] என்பது அச் சொல்லும் அதன் கருத்தும் தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் புறம்பானவை. பார்ப்பனர்களால் புராணக் கருத்துகளோடும், ”விக்கிரக ஆராதனை முறை” என்னும் உருவ வழிபாட்டோடும், இச் சொல்லும் கருத்தும் தமிழ்நாட்டினுட் புகுத்தப் பட்டனவாகும். பார்ப்பனர்களின் சமயத்திற்கு இந் நாட்டில் முதலில் இருந்த செல்வாக்கினாலேயே, சமயக் கருத்துக்களைத் தெரிவிப்பனவாய்த் தமிழ் நூற்களிற் காணப்படும் சொற்களிற் பெரும்பாலன வடசொற்களாகவோ, அச் சொற் சிதைவுகளாகவோ காணப்படுகின்றன. ஏற்ற திராவிடச் சொற்கள் இல்லை என்பதில்லை; முற்றிலும் ஏற்றவையும், ஒரோவழி வடசொற்களினும் சிறந்தனவாகவுங் கொள்ளக் கூடிய சொற்கள் உள. அவை யெல்லாம், இன்று வழக் கிழந்து, மறைந்து, செய்யுள் வழக்கில்மட்டும் அருகி வழங்குகின்றன. தமிழ்க் கல்வி மங்கியுள்ள இந்நாளில், உரை நடையில் அச் சொற்கள் வழங்குமேல் அந் நடை மிகவும் கரடுமுரடான தென்றும், கடபடாம் போன்ற தென்றும் கருதி இகழப்படும். தமிழ்ச் சமய நூல்களில் வடசொற்கள் பொதுவாக எடுத்தாளப்பட் டுள்ளமைக்கு இதுவே, உண்மையான காரணமும், ஒரே காரணமுமாகும்.

ஏனைய திராவிட மொழிகளில் எப்பொருளைக் குறித்தெழுந்த கட்டுரையாயினுஞ் சரி, செய்யுளாயினுஞ் சரி, அதன்கண் மிகுதியான வடசொற்கள் பயின்றிருக்கக் காணலாம். அவை புதுமை கருதி எடுத்தாளப்பட்டனவல்ல;


  1. Image