பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


௫. இலக்கண அமைப்பில் வடமொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்

(i) திராவிட மொழிகளில் உயிரற்ற பொருள்கள் மட்டு மன்றி, பகுத்தறிவற்ற உயிர்களும் பொதுப்பால் (அஃறிணை) ஆகவே மதிக்கப்படுகின்றன. ஆண்பால், பெண்பால் வகுப்பு, இடப் பெயர்களுள், அதிலும் படர்க்கையில்மட்டுமே, காணப்படுகிறது. பெயருரிச்சொற்களிலும், படர்க்கை வினைகளிலும் இப் படர்க்கைப் பெயரின் திரிபே விகுதியாய் நின்று பால் உணர்த்துகின்றது. உயிர்வகைகளின் பெயர்கள் பால்வகை காட்டவேண்டின் ஆண் பெண் என்ற பெயர்களைச் சேர்த்தே யாகவேண்டும்; அப்போதும் அவை ஆண் அல்லது பெண் பாலாவதில்லை; பொதுப்பாலேயாகும். ஏனெனில், அவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களும், அவற்றின் பயனிலையான வினைகளும் பொதுப்பால் (அஃறிணை) முடிவையே கொள்ளல்வேண்டும். இத்தகைய பால்வகுப்பு வடமொழி முதலிய இந்து - ஐரோப்பிய மொழிகளின் பகட்டான புனைவியல் பால்பாகுபாட்டினின்றும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சித்தியக் குழுவின் வழக்குக்கு இஃது ஒத்தது.

(ii) திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்கும்போது விகுதியேற்று உருமாறுவ தில்லை; அச் சொற்களினின்று எளிதில் பிரிக்கக்கூடிய பின் அடைகள் அல்லது உருபுகளையே ஏற்று மாறுகின்றன. மேலும் பன்மைப் பெயரின் வேற்றுமை யுருவானது உருபுகளை ஏற்கு முன் பன்மை விகுதி பெறுவதொன்றைத் தவிர மற்றெவ்