பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடர் ஆரியநாகரிகமேற்ற காலம்

171

ரவரே எனக் கூறலாம். அவர் சிறப்பாகத் தமிழ்முனி என்று வழங்கப் பெறுவதுடன் முதற் பாண்டியனான குலசேகரன் அவையில் தலைமை வகித்திருந்தாரென்றும், அவனைச் சீர்திருத்தி அறிவுறுத்தும் வகையில் மூல நூல்கள் பல இயற்றினாரென்றும், அவற்றுள் தமிழ்மொழி இலக்கணம் தலைசிறந்தது என்றும் கூறப்படுகின்றன. தமிழ்நாட்டுத் தென்புறவானில் சுடரொளி வீசி மிளிரும் விண்மீன்[1] அகஸ்தியரே என்று புராணங்கள் கூறும். கன்னியாகுமரிக் கருகில் அகஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றும் உள்ளது. பொருநை ஆறு தோன்றும் அகஸ்திய மலை என்னும் மலையில் இன்றும் அவர் உருமறைந்து வாழ்ந்துவருவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

அகஸ்தியர் காலமோ, திராவிடரிடையே பார்ப்பனர் நாகரிகம் புகுந்த காலமோ இப்பொழுதுதான் என்று வரையறையிட்டுக் கூற முடியாது. கிரேக்கர் காலத்தே நாடு முழுமையும் பார்ப்பன நாகரிக வயப்பட்டிருந்தமையையும், பேரூர்ப் பெயர்களிற் பல வடமொழிப் பெயர்கள் கொண்டு வழங்கினமையையும், பாண்டிய அரச பரம்பரையினர் அரசு செலுத்தி வந்தமை ஐரோப்பாவிலும் தெரிந்திருந்தமையையும் நோக்க, அக்காலம் கிரேக்கர் காலத்திலும் மிக முற்பட்டதென்று மட்டும் துணியலாகும். எனினும், அக்காலம் இராமாயண காலத்திற்குப் பிற்பட்டதேயாகவேண்டும். ஆகவே, அஃது இராமாயணத்திற்கும், கிரேக்கர் வரவிற்கும் இடைப்பட்ட காலமென்னலாம். மாபாரதத்தில் கூறப்படும் திராவிட அரசர்கள் பற்றிய குறிப்பு இடைச்செருகலன்று எனக் கொள்ளப்படின், அகஸ்தியர் காலம் இராமாயண மாபாரத காலங்களுக்கு இடைப்பட்டதென்பது ஏற்படும். இவற்றின் ஐயப்பாடான காலநிலையாலும், மனுவின் காலத்தின்


  1. Canopus