பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



கோண்டு :

மத்திய இந்தியாவிலுள்ள மலைநாடுகளிற் கோண்டு மொழி பயின்று வருகின்றது. எனினும், அம்மக்களிற் பெரும்பாலோர் ஆரிய மொழியைப் பின்னர் பயின்று அதனையே பேச்சு வழக்கிற் பெரிதுங் கையாண்டு வருகின்றனர். எனவே, உண்மையாகக் கூறுமிடத்துக் கோண்டு மொழி யென்பதைக் திராவிட மொழிக்கும், ஆரிய மொழிக்கும் இடைப்பட்டதொரு கலப்பு மொழியாகவே கூறுதல் வேண்டும். இதன்வழிக் கிளைத்தனவாக எண்ணிறந்த மொழிகளுள; எனினும், அவற்றுள் ஒன்றற்கேனும் எழுத்து வடிவோ, இலக்கணமோ கிடையா.

தெலுங்கு :

தெலுங்கு மொழியே ஆந்திர மொழியினத்தின் தலை சிறந்த மொழியாகும். சென்னை தொடங்கி ஒரிஸ்ஸா வரையிலுள்ள சென்னை மண்டிலத்தின் கீழைப் பகுதி யெங்கணும் தெலுங்கு மொழியே பேச்சு வழக்கிலிருந்துவருகின்றது. நிசாம் நாட்டிலும், மத்திய மண்டிலத் தென்கோடியிலும், பீரார் பகுதியிலும் இஃது ஒருவாறு பயின்றுவருகின்றது. பரந்த இலக்கியவளம் படைத்ததொரு பெருமொழி. தேவ நாகரியையொத்த தனிப்பட்ட வரிவடிவில் இஃது எழுதப் பட்டு வருகின்றது.

கந்தம் :

ஒரிஸ்ஸா மலைகளிலுள்ள கந்தர் பேசுவது கந்த மொழி. இது திருந்தியதொரு மொழியன்று. இதற்குக் கோலாமி என்றதொரு திருந்தாத கிளைமொழியுமுண்டு. இக் கிளைமொழி பீரார்நாட்டு எல்லைப் பகுதிகளில் ஒரு சிலரால் பேசப்பட்டு வருகிறது.