பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

திருக்குறள்


அழகு பெற மலர்ந்திருந்தும், மணம் சிறிதும் இல்லாமல் இருக்கும் மலருக்குச் சமமானவராகவே மதிக்கப்படுவர்.

இணர்-பூங்கொத்து; ஊழ்த்தல்-மலர்தல்; நாறா மலர்-மணமில்லாத மலர். 650

66. வினைத் தூய்மை


1.துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.

ஒருவருக்குத் துணையினது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும். அதனோடு, அவர் செயல் நலமும் பெற்றிருந்தால், அவர் விரும்பும் எல்லா நலன்களையும் அந்தச் செயல் நலம் தரும்.

அமைச்சர்கள் பேச்சு வன்மையோடு செயல் நலமும் உடையவர்களாக இருத்தலின் இன்றியமையாமையை இக் குறள் தெரிவிக்கிறது. வினை நலத்தால் இம்மையில் பெறக் கூடிய செல்வத்தோடு, மறுமை இன்பத்தையும் அடையக் கூடும் என்றும் இக்குறளுக்கு விரிவுரை கூறுவர். 651

2.என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

ஒர் அமைச்சர் தமக்கும், தம் அரசனுக்கும் புகழையும், நன்மையையும் தாராத செயல்களை எந்தக் காலத்தும் முற்றிலும் ஒழித்து விடுதல் வேண்டும்.

ஒருவுதல்-விட்டு நீங்குதல்; நன்றி-நன்மை. 652

3.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅது என்னும் அவா.

மேம்பாட்டினை அடைய விரும்புவோர் தம் புகழ் கெட வரும் தொழிலைச் செய்தலை முற்றிலும் விட்டு நீங்குவாராக.

ஓஒதல்-ஒவுதல், ஒழித்து விடுதல்; ஒளி-இங்கே புகழினைக் குறிக்கும்; மாழ்குதல்-கெடுதல்; ஆஅதும்-ஆகுவோம்; மேம்பாட்டினை அடைவோம். 653