பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

திருக்குறள்



செய்யும் செயல்களால் தனிச் சிறப்பைப் பெற்று உயர்ந்தவர்தம் வினைத் திட்பமானது, அந்த நாட்டை ஆளும் அரசன் உள்ளத்திலும் பதிவதால், எல்லாராலும் நன்கு மதிக்கப்படும்.

வீறு-தனிச்சிறப்பு; மாண்டார்-சிறப்புக்களால் உயர்ந்தவர்; ஊறு எய்தல்-(உள்ளத்தே) சென்று. தங்குதல்; உள்ளப்படும்-நன்கு மதிக்கப்படும். 665

6.எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

எண்ணினவர் அவற்றைச் செய்து முடிக்கும் உள்ள உறுதியை உடையவராகப் பெறுவாராயின், தாம் எண்ணியவற்றை எண்ணியபடியே பெறுவர். 666

7.உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

உருண்டு செல்லத் தக்க பெரிய தேருக்கு, அதன் அச்சில் இருந்து அதனைத் தாங்கும் சிறிய ஆணியைப் போன்ற திண்ணியாரை இவ்வுலகம் பெற்றிருக்கிறது. ஆதலால், ஒருவரை அவர்தம் வடிவின் சிறுமை கண்டு இகழக் கூடாது .

அச்சாணி-தேரின் கடையாணி. 667

8.கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.

மனத்தெளிவுடன் ஆராய்ந்து கண்டறிந்த ஒரு தொழிலினைச் சோர்வு கொள்ளாமலும், காலம் கடத்தாமலும் செய்து முடிக்க வேண்டும்.

துளங்காமை-திட்பமுடைமை, உள்ளச் சோர்வு கொள்ளாமை; தூக்கம்-சோம்பலால் தாமதமாகச் செய்தல்; கடிதல்-நீக்குதல். 668

9.துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

முடிவில் இன்பத்தைத் தரத் தக்க ஒரு செயலைச் செய்யும் போது, துன்பம் மிகுதியாக வருமாயினும், அத்துன்பம் நோக்கி உள்ளம் தளராது, துணிவு மேற்கொண்டு செய்து முடித்தல் வேண்டும். 669