பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

திருக்குறள்



கலங்கக் கூடும் என்று அஞ்சி, அக்குறை தீரக்கூடிய சந்து வாய்க்கப் பெறின் தம்மினும் பெரியராய் அவர் தம் நட்பை மிகவும் தாழ்மையோடு ஏற்றுக் கொள்வர்.

உறை-உறையுமிடம், அஃதாவது நாடு; குறைபெறின்-தம் குறைகள் தீரப் பெறின் அல்லது குறையிரத்தற்கு உடன்பட்டுத் தம் எண்ணத்தை ஏற்றுக் கொள்வாராயின் என்பது. 680

69. தூது


1.அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

யாவரிடத்தும் அன்பாயிருத்தல், தன் பதவிக்கு ஏற்ற நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல், அரசர்களாலே விரும்பப்படும் குணங்களையுடையவனாக இருத்தல் ஆகிய இவை தூதுரைப்பவனுக்குரிய தகுதிகளாகும்.

ஆன்ற குடிப்பிறப்பு-அரசர்களோடு அமர்ந்து உரையாடுதற்கு ஏற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறத்தல்; அவாம்-விரும்பத் தக்க; தூது-அரசர்கள் இடையே கருத்து வேற்றுமை நேர்ந்த போது ஒருவர் எண்ணத்தை மற்றொருவருக்கு எடுத்துரைத்தல். 681

2.அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

அரசன் மாட்டு அன்பு, அரசனுக்கு ஆவன அறியும் அறிவுடைமை, வேற்று அரசரிடம் சொல்லும் போது அந்த அரசரிடம், தம் அரசன் கூறியவைகளை ஆராய்ந்து சொல்லத் தக்க சொல்வன்மை ஆகிய இவை தூது உரைக்கச் செல்பவர்க்கு இன்றியமையாத மூன்று குணங்கள் ஆகும். 682

3.நூலாருள் நூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

வேல் போன்ற போர்க் கருவிகளைக் கையாளும் பிற அரசரிடம் சென்று, அவன் போன்றே போர்க் கருவிகளைக் கையாளும் தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான