பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

திருக்குறள்



4.நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

கட்குடித்தல் என்னும் விரும்பத்தகாத பெருங் குற்றத்தைப் புரிபவர் முன்பு, நாணம் என்று சொல்லப்படுகின்ற நல்லாள் எதிர் நில்லாமல் திரும்பிப் போய் விடுவாள்.

நாண் என்னும் நல்லாள்-நாணம் என்னும் நற்குணத்தை வள்ளுவர் ஒரு பெண்ணாக இங்கே உருவகித்துக் கூறுகின்றார்; நல்லாள்-நற்குணம் பலவும் அமைந்த பெண்; புறங்கொடுத்தல்-முதுகிடுதல், திரும்பிச் செல்லுதல்: பேணா-விரும்பத் தகாத,

கட்குடியன் நாணம் என்பதையே இழந்து நிற்பவன் என்பது கருத்து. 924

5.கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

ஒருவன் தான் வருந்திப் பெற்ற பொருளை விலையாகக் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல் பழைய வினையின் பயன் என்றே சொல்லுதல் வேண்டும்.

கை-செயல்; கையறியாமை-செய்வது அறியாமை; ஆதலால் இதற்குப் பழவினைப்பயன்’ என்றே பரிமேழழகர் பொருள் கொள்ளுகின்றார்; பழவினை-முன் பிறப்பில் செய்த தீவினை. 925

6.துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

உறங்கினவர் செத்தாரை விட வேறுபட்டவர் அல்லர்; அது போலவே எஞ்ஞான்றும் கள் உண்டு அறிவு மயங்கி இருப்பவர், விஷத்தை உண்டு அறிவு மயங்கி இருப்போருக்குச் சமமாகவே இருப்பர்.

கள்ளுண்பவர் உறங்குபவர் போன்று மயங்கி இருந்தாலும், செத்துக் கிடப்பவருக்குச் சமமாகவே கருதப்படுவர்; கள்ளுண்டலும், விஷம் உண்டல் போன்று சீக்கிரத்தில் மக்களை இறக்க வைக்கிறது. ஆதலால், இம்மூன்றும் கள் உண்போருக்கு ஒரு வகையில் உவமைகளாகவே அமைந்திருத்தல் காண்க. 926