பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள்ளுண்ணாமை

251



7.உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

கள்ளை மறைத்துண்டு அறிவு மயங்கி இருப்பவர் உள்ளூரில் வாழ்கின்றவரால் துப்பறியப் பெற்று எந்நாளும் எள்ளி நகையாடப் பெறுவர்.

உள்ளொற்றி-உள்ளே நிகழும் செயல்கள் துப்பறியப்பட்டு; உள்ளூர்-சொந்த ஊரில் வாழும் மக்களால்; தருதல்-எள்ளி நகையாடுதல்: ஏளனச்சிரிப்பு; எஞ்ஞான்றும்-எக்காலத்தும்; கள் ஒற்றி-கள்ளினை மறைவாக இருந்து அருந்தி; கண் சாய்தல்-அறிவு மயங்கியிருத்தல். 927

8.களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

மறைந்து கள்ளுண்பவன் "யான் ஒரு போதும் கள்ளுண் டறியேன்" என்று சொல்லுதலை விட்டு விடுக. ஏனெனில் நெஞ்சில் மறைத்து வைத்திருந்த அந்தக் குற்றமும் கள்ளுண்ட அப்போதே அவன் வாயிலிருந்து வெளிப்பட்டு விடும்.

குறிப்பு:'கள்ளைக் குடித்தவன் உள்ளதைச் சொல்லுவான்' என்பது பழமொழி. 928

9.களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

கட்குடியன் ஒருவனுக்குக் கள்ளினால் விளையும் கெடுதிகளைக் காரணம் காட்டி விளக்குதல் நீரில் மூழ்கியுள்ள ஒருவனை மற்றொருவன் விளக்கினைக் கொண்டு தேடினாற் போன்றதே ஆகும்.

நீரில் மூழ்கி இருப்பவனை விளக்கைக் கொண்டு தேடிக் கண்டறிவது முடியாதது போலக் கள்ளுண்டு களிப்பவனுக்கும் அதன் கெடுதியை விளக்கிக் கூறி அவனைத் திருத்த முடியாது என்பதாம்.

காரணம் காட்டுதல்-விளக்கிக் கூறல்; நீர்க் கீழ்க் குளித்தான்-நீரில் மூழ்கியுள்ளவன்; தீ-விளக்கு; துரீஇயற்று-தேடினாற் போன்றது. 929