பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. மணிவிழாக் காதை


தெருவிடை மணல்ப ரப்பித்
தெள்ளிய நீர்தெ ளித்தும்
அரிசியிற் றிரித்த மாவால்
அணிபெறக் கோல மிட்டும்
வருபவர் உள்ள மெல்லாம்
மகிழ்வினிற் குளிரும் வண்ணம்
அரிவையர் கோலஞ் செய்ய
அழகினாற் பொலிந்த தவ்வூர் [1].1

புதுக்கிய மனையின் வாயிற்
பூம்பொழிற் பந்த ரிட்டார்;
மதிற்புறங் கமுகு வாழை
மரங்களும் குலைகள் தொங்க
எதிர்ப்புறங் கட்டு வித்தார்;
இளந்தளிர்க் குருத்தெ டுத்துப்
புதுப்புது முறையாற் பின்னிப்
பொலிவுற நால [2] விட்டார்.2


  1. மகிபாலன்பட்டி
  2. தொங்க