பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

163

யாக மராத்தியரால் கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையில் நவாப்பின் மைத்துனன் முர்த்தளலா அலி என்பவன் நவாப்பை படுகொலை செய்தான். இறந்தவரின் இளம் மகன் நவாப்பாக தெரிவு செய்யப்பட்டான். அந்த சிறுவனை அவனது பாதுகாப்பாளராக இருந்த அன்வர்தீனும், முர்த்தலா அலியும் சேர்ந்து சதி செய்து கொன்றனர். அடுத்து அன்வர்தீன் கர்நாடக நவாப் என்று பட்டம் புனைந்து கொண்டான்.

மராட்டிய மாநிலத்தினின்றும் தப்பி வந்த சந்தாசாகிபு, தமது உறவினரான நவாப்பைக் கொன்ற பாதகன் அன்வர்தினைப் போரில் கொன்று ஆற்காட்டைக் கைப்பற்றினார். அன்வர்தீன் மகன் வாலாஜா என்ற முகம்மது அலி, சந்தா சாகிபுவிடமிருந்து தப்பி திருச்சிக் கோட்டைக்கு ஓடினார். நிஜாம் சந்தா சாகிபுவை நவாப்பாக அங்கீகரித்தார். பிரஞ்சுக் காரர்களும் அவரை ஆதரித்தனர். என்றாலும், ஆங்கிலேயரது உதவி கொண்டு முகம்மது அலி சந்தா சாகிபுவை எதிர்த்தார். சந்தா சாகிபுவை துரோகத்தால் கொன்று ஆற்காட்டு நவாப் ஆனார். ஆந்திரத்திலிருந்து திருவாங்கூர் வரையான பகுதிக்கு ஆதிக்க உரிமை கொண்டாடி அதனை நிலைநாட்ட பல போர்களை மேற்கொண்டார். ஆனால் திருநெல்வேலிச் சீமையில் பாளையக்காரர் அவரை தங்களது மன்னராக அங்கீகரிக்க மறுத்தனர். இவர்களுக்கு நெற்கட்டும் செவ்வல் பாளையக்காரரான பூலித்தேவர் தலைமை தாங்கினார்.

ஏறத்தாழ இருபது வருடங்கள், நீடித்த இந்த உள்நாட்டுப் போரிலும், மறவர் சீமை மன்னர்கள், தஞ்சை மன்னர், மைசூர் மன்னர், பிரஞ்சுக்காரர் ஆகியவர்களுடன் நடத்திய போர்களிலும் முகம்மதுஅலி ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் பெருங் கடனாளியானார். அவர்கள் இந்தப் போர்களில் நவாப்பிற்கு உதவியதற்காக பல சலுகைகளை நவாப்பிடமிருந்து பெற்ற பொழுதும், தங்களது கடனை வட்டியுடன் வசூலிக்கத் தவறவில்லை, இந்தக் கடன் கணக்கு எப்படி எழுதப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணம். கி.பி. 1758-59-ல் பிரஞ்சு தளபதி ஆங்கிலேயரின் சென்னைக் கோட்டை மீது தாக்குதல் நடத்தினார். அந்தப் போரில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட செலவு அனைத்தும் முகம்மது அலியின் செலவாக கணக்கு எழுதப்பட்டது. முகம்மது அலியின் நண்பர்கள் அல்லவா ஆங்கிலேயர்!