பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

179

இணங்க வைத்து, நாயக்க மன்னர் பரம்பரையைச் சேர்ந்த இளவல் விஜயகுமார பங்காரு திருமலை நாயக்கரை கி.பி. 1751-ல் மதுரைப் பேரரசராக முடிசூடும்படி செய்தனர். ஐந்து ஆண்டுகள் கழித்து ஆற்காட்டு நவாப் முகமது அலியின் பிரதிநிதியாக மதுரை கவர்னராகப் பணியாற்றிய கம்மந்தான் கான்சாகிபுடன் நெருக்கமாக இருந்து அவரது நல்லாட்சிக்கு ஆதரவாக இருந்தார். இவர்.

கான்சாகிபுவின் ஆண் குழந்தைக்கு சிறந்த அணிமணிகளை அன்பளிப்பாக வழங்கியதற்காக மேலுர் வட்டத்தில் உள்ள சிறுமணியேந்தல் என்ற சிற்றுரரை கம்மந்தானிடமிருந்து சர்வமானியமாகப் பெற்றார். ஆனால் அதனை தனக்கென வைத்துக் கொள்ளாமல் தாம் வழிபடும் மதுரை மீனாட்சிக்கு தானமாக வழங்கி விட்டார். இந்த அளவிற்கு கம்மந்தானுடன் நட்பாக இருந்த இவர், கம்மந்தான் ஆற்காட்டு நவாப்புடனும் கும்பெனியாருடனும் மனந் திரிந்தவராக கி.பி. 1763-64-ல் வீரமரணப் போரிட்ட பொழுது, அவருக்கு உதவ முன்வராது பெரும் பழிக்கு ஆளானார். காரணம் நவாப் முகம்மதலியின் பேச்சை முழுதுமாக நம்பியதுதான்.

ஆனால் ஏழு ஆண்டுகளில் நவாப் முகம்மது அலியின்வாக் குறுதி பொய்த்து விட்டது. சிவகங்கை மீது நவாப்பின் படைகளும் பரங்கிப் படைகளும் தாக்குதல் தொடுத்தன. எதிர்பாராத வகையில் காளையார் கோவில் போரில் சிவகங்கை மன்னருடன் நின்று கடும் போர் புரிந்தார். முடிவு மன்னர் குண்டடிபட்டு வீழ்ந்து இறந்தார். கோட்டையும் விழுந்தது. ஆனால் இந்தப் பிரதானி நவாப்பிடம் சரணடையவில்லை. சிவகங்கை அரசி வேலுநாச்சியாரை பாதுகாப்பாக மைசூர் மன்னரது விருபாட்சியில் வைத்து விட்டு சிவகங்கைச் சீமையை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளில் இறங்கினார். மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு தூது அனுப்பி சிவகங்கை மீட்சிக்கு ராணுவ உதவி கோரினார். சிவகங்கை சீமையில் உள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் ஒலைகள் அனுப்பி நவாப்புடனும் கும்பெனியாருடனும் மோதுவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தார்.