பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

181

படைகளையும், அவர்களுக்குத் துணைபுரிந்த கும்பெனியாரது கூலிப்பட்டாளங்களையும் சிவகங்கை மண்ணில் இருந்து விரட்டி அடித்தனர்.

சிவகங்கைச் சீமை மீண்டும் சுதந்திர நாடாகியது. ராணி வேலு நாச்சியார் அரசியாராக முடிசூட்டப்பட்டார். மண்ணின் மானம் காத்த மருது சகோதரர் இருவரும் சிவகங்கைப் பிரதானிகளாகப் பணி ஏற்றனர். நாளடைவில் பெரிய மருதுவிற்கும், அரசியாருக்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. அதனால் பிரதானி சின்னமருது அரசியாரது அதிகாரங்களைப் புறக்கணித்தவராக, தாமே அரசியலை நேரடியாக நடத்தி வந்தார். முந்தைய மன்னர்களது வழியில் நின்று, தாமே பல அற நிலையங்களை நிறுவினார். அன்ன சத்திரங்களைத் தோற்றுவித்து ஆலயத் திருப்பணிகளையும் மேற்கொண்டார். ஆற்காட்டு நவாப்பிற்கும், கும்பெனியாருக்கும் விசுவாசமுள்ள பாளையக்காரராக இருந்து வந்தார். அதனால் அவர்கள் தங்கள் சிவகங்கை சீமைக்கான கடிதப் போக்குவரத்தினை சின்னமருதுவுடன் மட்டும் கொண்டிருந்தனர். அரசியார் ஒருவர் அங்கு இருப்பதை அவர்கள் மறந்து விட்டனர். இவரைத் தங்கள் ஆவணங்களில் சிவகங்கை சேர்வைக்காரர்' என்று குறிப்பிட்டு வந்தன்ர். அந்த அளவிற்கு அவர்களுக்கிடையில் நெருக்கம் இருந்தது. -

ஆனால் இவரும், இராமனாதபுரம் மன்னரும் நெருங்க முடியாத அளவில் தீராத பகையும் வெறுப்பும் கொண்டிருந்தனர். சுதந்திர வேட்கை கொண்ட சேதுபதி மன்னரது சீமை அரசியலில் கும்பெனியார் நேரடியாக தலையிடுவதற்கும், பொது மக்கள் பல தொல்லைகளுக்கு ஆளாவதற்கும் இவர்களுக்கு இடையிலான பூசல்கள் பயன்பட்டன. பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகள் முழுவதும் தன்னரசாக விளங்கிய மறவர் சீமை கும்பெனியாரது ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. சேதுபதி மன்னரும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த அநீதியை எதிர்த்துக் கிளர்ந்து எழுந்த மறவர் இயக்கங்களை கும்பெனியார் அடக்கி ஒடுக்குவதற்கு மருது சகோதரர்களும் காரணமாக இருந்தனர்.

என்றாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசியல் முழுவதையும் தமதாக்கிக் கொண்ட கும்பெனியார் தமக்குப் பல