பக்கம்:அகத்திய முனிவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                       பிறப்பு.                                            15


    இசைதிசை பரவ இங்ஙனம் பெரும்பேராளராய் விளங்கி நிற்கும் இவ் அருங்குணக் குரிசிலை அருந்தவ ரனைவரும் தமக்கோர் பெரும்பேறாக விரும்பி நின்றார். பொறிகளை யடக்கி அருள்நெறி நின்று இவர் தெருளுடன் ஒழுகியதைக்கண்டு தேவரும் வியந்தனர். இவர் தத்துவக் கலைகள் முற்றவுந் தெளிந்த வித்தகக் கலைஞர். முத்திக்குரிய ஞான நிலை, யோகநிலை முதலிய உத்தம நிலைகளிலெல்லாம் இவர் உயர்ந்திருந்தனர். அதனால் ஞானிகள் இவரைத் தத்துவஞானி என்பர்; யோகிகள் இவரைத் தம் இனத்தைச் சார்ந்த யோகியர் என்பர். சித்தர்கள் முதலிய ஒவ்வோர் உத்தமர்களும் தத்தம் இனத்தில் வைத்துத் தலைவராகச்சாற்றி இவரைப் போற்று கின்றனர்.


    "பூரணப்பரம் பொருளின்முக் குணமெனப் பொலியும்
     காரணத்தினர் மூவரில் ஒருவனாம் கமலன்
    ஆரணத்தலை நிலையினின் றருண்முதற் புதல்வன்
    சீரணப்படா அகத்திய முனிப்பெயர்த் தெளிஞன். (1)


    ஞானவான்கள் மெய்ப்பரத்தருள் சகளமா நவில்வர்;
    ஈனமின்றிய யோகியர் தமதிறை என்பர்;
    வானமேற்படர் சித்தர்தம் இனத்தனா வகுப்பர்;
    ஆனதாலனைத்திலும் வலான் அவனெனத் தகுமே” (2)
                                                  (புலவர்புராணம்)


    என முருகதாசர் இப்பெருமானை உலகம் கொண்டிருக்கும் நிலையினைக் குறித்து இங்கனம் அருளியுள்ளார். இன்னவாறு பல நூல்களிலும் இவரது சிறப்பு நலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவரது தெய்வப்பெற்றியை நினைந்து யாவரும் வியந்துளார். தேவரும் புகழ்ந்துளார்.